தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகள் விரைவில் அகலும்... ராமதாஸ் சித்திரை திருநாள் வாழ்த்துகள்
தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சித்திரை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை: சித்திரை மாதம் நாளை பிறக்க உள்ளதால் தமிழக மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகள் விரைவில் அகலும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
உழைப்பு, கொண்டாட்டங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தை முதல் நாள்
தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வரும் போதிலும் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள்.

சித்திரை திருநாள்
அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது வரலாறு.

நிகழ்காலம் வேறு
ஆனால், நிகழ்காலம் வேறாக இருக்கிறது. வறட்சியாலும், கடன் தொல்லையாலும் 320 உழவர்கள் உயிரை விட்டுள்ளனர். மற்றொரு பக்கம் சாலையோர மதுக்கடைகளை பாட்டாளி மக்கள் கட்சி மூட வைத்த நிலையில், அவ்வாறு மூடப்பட்ட கடைகளை பிற பகுதிகளில் திறக்காமல் தடுக்க பெண்கள் போராடும் நிலையும், அவ்வாறு போராடும் பெண்களை காவல்துறை தாக்கும் அவலமும் நீடிக்கிறது.

தீமைகள் அகலும்
சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications