முடங்கிக் கிடந்த அரசு இனியாவது இயங்கட்டும்... புதிய அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்
நல்லாட்சிக்கான இலக்கணத்துடன் ஆட்சி செய்தால் புதிய அரசை மக்கள் வாழ்த்துவார்கள் என்றும் இல்லாவிட்டால் விரட்டுவார்கள் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவையொட்டி புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு நல்லாட்சி வழங்க வேண்டும் என்றும் முடங்கி கிடந்த அரசு இனியாவது முறையாக இயங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்து நேற்று முன் தினம் மறைந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர் குழுவும் பதவியேற்றது. புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு இனியாவது முறையாக செயல்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறுப்பேற்றுள்ள 32 அமைச்சர் பெருமக்களுக்கும் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

புதிய அரசுக்கு நெருக்கடி அதிகம்
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நேரம் மிகவும் நெருக்கடியாக காலகட்டம் தான் என்ற போதிலும், அவசரமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களும், கடமைகளும் அதிகமாக உள்ளன. ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், கடன் சுமை வேகமாக அதிகரித்து வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடி
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.2.52 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.21,215 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனக் கடன் மதிப்பு துல்லியமாக தெரியாவிட்டாலும், அதுவும் இதே அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதையும் சேர்த்து தமிழகத்தின் மொத்தக் கடன் தொகை ரூ.5 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்திலுள்ள ஒவ்வொருவர் மீதும் ரூ. 70,000 கடனை தமிழக ஆட்சியாளர்கள் சுமத்தியுள்ளனர்.

பிற மாநிலத்திற்கு சென்ற ஒரு லட்சம் கோடி முதலீடுகள்
மற்றொருபுறம் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் குவிவதாக ஆட்சியாளர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திலிருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள தொழில் முதலீடுகள் அண்டை மாநிலத்திற்கு சென்றுள்ளன.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்
இதேநிலை நீடித்தால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைக் குறைந்து தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலின்படி 84 லட்சம் பேரும், கள நிலவரங்களின்படி சுமார் ஒன்றரை கோடி பேரும் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், கூடுதலாக வேலையிழப்பு ஏற்பட்டால் அது உள்நாட்டில் அமைதியின்மையையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

பிரச்சனைகள் சூழ்ந்த தமிழ்நாடு
தமிழர்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வாங்குதல், தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை சீர்குலைக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தடை வாங்குதல், வறட்சியின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த சில வாரங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி தாங்க முடியாமலும் உயிரிழந்துள்ள நிலையில், விவசாயிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்துதல், கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் முடங்கிக் கிடக்கும் வணிகத்திற்கும், தொழிலுக்கும் புத்துயிர் ஊட்டுதல் என தமிழகத்தின் புதிய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. இவை தவிர கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத திட்டங்களும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத திட்டங்களும் நூற்றுக்கணக்கில் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

கைகள் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்
2011ஆம் ஆண்டில் பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு நத்தை வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்றால், 2014 ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பிறகு அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. அதன்பின் அரசின் இயக்கம் இன்று வரை வேகம் பெறவில்லை. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வம் கடந்த ஆட்சியில் 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார்; இப்போதைய ஆட்சியில் 48 நாட்களுக்கு முதலமைச்சர் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். ஆனால், இந்தக் காலத்தில் விசுவாசத்தை தான் காட்டினாரே தவிர, திறமையை காட்டவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க வில்லை. அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது உட்பட ஏராளமான காரணங்கள் இதற்கு இருக்கலாம்.

முழு வீச்சில் புதிய அரசு
ஆனால், இப்போது அவருக்கு எந்த தடையும் இருப்பதாகத் தோன்றவில்லை. இன்னும் நான்கரை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், தீர்ப்பதற்கான பிரச்சினைகளும், ஆற்றுவதற்கான பணிகளும் ஏராளமாகவே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தராமல் அரசியல் சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

உறுதிமொழிப்படி செயல்படுங்கள்
அரசின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எவருடனும் விவாதிக்காமல், பதவியேற்பின் போது அரசியலமைப்புச் சட்டத்தின் 164(3)பிரிவின் கீழ் ஏற்றுக் கொண்ட,‘‘தமிழ்நாட்டு மாநில அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், அமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை ஆற்றுவதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் உறுதியேற்கிறேன்''என்ற உறுதிமொழியை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.

ஊழல் தொடர்ந்தால் மக்கள் விரட்டுவார்கள்
நல்லாட்சிக்கான இலக்கணங்களை மதித்து ஆட்சி செய்தால் புதிய அரசை மக்கள் வாழ்த்துவார்கள். மாறாக மற்றவர்களின் அதிகார வீச்சுக்கு பணிந்து, ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் மக்களே விரட்டியடிப்பார்கள் என்பதை புதிய அரசும், அமைச்சர்களும் உணர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications