5 மீனவர் விவகாரம்.. முட்டாள்.. பொய்யர் என மூச்சுவிடாமல் அர்னாப்பை திட்டித் தீர்த்த சு.சுவாமி!
சென்னை: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பது குறித்த விவாதத்தின் போது சுப்பிரமணியன் சுவாமியுடன் நீண்ட நேரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி மல்லுக்கட்டியது சுவாரசியமாக இருந்தது. இந்த விவாதத்தின் போது பல முறை அர்னாப் கோஸ்வாமியை முட்டாள், பொய்யர் என்று மூச்சுவிடாமல் சுப்பிரமணியன் சுவாமி திட்டித் தீர்த்த்தார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக வழக்கு தொடர்ந்தது இலங்கை அரசு. இந்த வழக்கில் 5 மீனவர்களுக்கும் கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகமே கோரி வருகிறது. மத்திய அரசும், 5 மீனவர்களுமே அப்பாவிகள் என்றும் கூறியதுடன் மேல்முறையீடு செய்வோம் என்றும் அறிவித்தது.

அப்பாவிகள்தான் 5 மீனவர்கள் என்று மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் எப்போதும் குறுக்குசால் ஓட்டும் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியா- இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுமாறு என்று ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இது 5 மீனவர் பிரச்சனையில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதாவது சுப்பிரமணியன் சுவாமியின் செயல் சரியா? தவறா? என்ற அடிப்படையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன், வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுப்பிரமணியன் சுவாமியும் விவாதத்தில் பங்கேற்றார்.
தொடக்கத்தில் பேசிய சுதர்சன நாச்சியப்பன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எப்போதுமே எதிரானவர் சுப்பிரமணியன் சுவாமி என்று பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் கருத்து என்பது எப்படி கணக்கிடுகிறீர்கள்? தமிழக மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார் என்றார். மேலும் வைகோ மீதும் வழக்கம் போல விமர்சனத்தை முன்வைத்தார்.
உடனே குறுக்கிட்ட அர்னாப் கோஸ்வாமி, அப்படியானால் தமிழக மக்கள் 5 மீனவர்களையும் தூக்கிலிடச் சொல்கிறார்களா? இதுதான் பெரும்பான்மை கருத்தா? என்று மடக்கினார்.
இதில் திடுக்கிட்டுப் போன சுப்பிரமணியன் சுவாமி, நான் எழுதிய கடிதத்தில் அப்படிச் சொல்லி இருக்கிறேனா? நீங்கள் ஒரு பொய்யர்..பொய்யர் என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.
பொறுமையாக இருந்த அர்னாப்பும் ராஜபக்சேவுடன் நட்பாக இருக்கும் நீங்கள் ஏன் 5 மீனவர்களை விடுதலை செய்ய முடியவில்லை என்று திரும்ப திரும்ப கேட்க 'அவமானத்தின்' உச்சத்தில் அவதிப்பட்டார் சுப்பிரமணியன் சுவாமி.
இதனால் அர்னாப்பை 5 நிமிட நேரத்துக்கும் மேலாக பொய்யர், முட்டாள் என்று லைவ் நிகழ்ச்சியிலேயே மூச்சுவிடாமல் வசைமாறி பொழிந்தார் சுப்பிரமணியன் சுவாமி. உங்களை பணியில் வைத்திருக்கும் நிறுவனத்துக்குத்தான் அசிங்கம் என்றெல்லாம் கொந்தளித்துப் பார்த்தார்.
வழக்கமாக ஓவர் சவுண்டு விடும் அர்னாப்போ சுவாமியின அர்ச்சனைகளை புன்னகைத்தபடியே மிஸ்டர் சுவாமி, லிஸன் மீ, ப்ளீஸ் லிஸன் மீ என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அடங்கா கோபத்தில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி, யூ ஆர் லையர், கவார்ட், ஸ்டுபிட் என்று மீண்டும் திட்டத் தொடங்க ஒரே களபரமாகத்தான் காட்சி அளித்தது விவாதம்.
இதற்கு முன்னர் ஈழப் பிரச்சனை குறித்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி அர்னாப்புடன் விவாதம் செய்த போது, அவரது காதில் பொருத்தப்பட்டிருகும் மைக்கை கழற்றிவிடுவேன்... என்றெல்லாம் சவுண்டு விட்ட அர்னாப் கோஸ்வாமி, சுப்பிரமணியன் சுவாமியிடம் பம்மிப் பம்மி கெஞ்சிக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications