கரூரில் 30 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்: மக்கள் திடீர் சாலை மறியல்
கரூர்: கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பின்பு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறியது. இந்த நிலையில் அதிமுக ஆட்சி ஏற்பட்டது முதல் வாரம் ஒரு முறை குடிநீர் வினியாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாதம் ஒரு முறை மட்டுமே தங்களது பகுதிக்கு குடிநீர் வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், கரூரை சுற்றியுள்ள பெரிய ஆண்டாங்கோவில், சிறிய ஆண்டாங்கோவில், மருத்துவ நகர், சுந்தர் நகர் மற்றும் மருதாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் காலி குடங்களுடன் கரூர்-ஈரோடு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுப்பட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறகு பஞ்சாயத்து அலுவலர்கள் சென்று, குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகளில் லாரி மூலம் தண்ணீர் வினியோகிப்பதாகவும், போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications