குற்றால சீசனும் குடிபோதை வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களும்
குற்றாலம்: ஜூன் மாதம் வந்துவிட்டாலே தென்னகத்தின் ஸ்பா எனப்படும் குற்றாலத்தில் அருவிகள் கொட்டத் தொடங்கிவிடும். இந்த அருவிகளில் குளித்து மகிழ தமிழகம் முழுவதிலும் இருந்தும் பயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் தென்மேற்கு பருவமழை பொழியும் காலமான ஜூன்,ஜூலை,ஆகஸ்டு, ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 45 லட்சம் சுற்றுலாப் பயணிகளும்,ஐயப்ப சீசன் காலமான நவம்பர்,டிசம்பர்,ஜனவரி,ஆகிய காலங்களில் சுமார் 20-25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளும் குற்றாலத்திற்கு வந்து குவியத்தொடங்குவார்கள்.
குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இதனால் தினமும் இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும். விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த ஆண்டு ஜூலையில் சீசன் துவங்கியது முதல் தினமும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஆண்டு தோறும் குற்றால சீசனில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்

சீசன் காலங்களில்
சீசன் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்பேர் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தான் வருகின்றனர்.

போதை பயணம்
குடும்பத்தோடு வரும் சுற்றுலாப் பயணிகள் தவிர நண்பர்களாய்,பணியாளர்களாய் குற்றாலம் நோக்கி புறப்படும் வாகனங்களில் பெட்டி பெட்டியாக ஆக மதுப் பெட்டிகள் இல்லாமல் அவர்கள் பயணத்தை தொடங்குவதில்லை.

பலியாகும் அப்பாவிகள்
பலர் போதையில் தான் புறப்படுகின்றனர்.அவர்கள் வரும் வழிகளில் விபத்துக்கள்,வந்து செல்லும் போது விபத்து என சீசன் காலங்களில் குற்றாலம் வரும் போதும், குளித்துவிட்டு திரும்பும் போதும் விபத்துக்கள்,சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து என இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் 20பேர்வரை பலியாகியுள்ளனர்.

தடுக்க முடியவில்லை
உயர் நீதிமன்ற உத்திரவுப்படி குற்றாலத்தில் மதுக் கடைகளை அப்புறப்படுத்தினாலும் வாகனங்களில் பெட்டி,பெட்டியாக வாங்கி வருவதையும்,வாகனத்தில் குடிப்பதையும் யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிபோதையே காரணம்
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால்தான் சாலை விபத்து ஏற்படுகிறது என போலீசார் கூறுகின்றனர். வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாகி விடுகின்றனர். வாகனங்களில் செல்வோர் தங்களின் வாகன ஓட்டி குடிபோதையில் இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனிப்பது மிகவும் அவசியமானதாகும்.

தென்காசியில் விபத்துக்கள்
கடந்த 2007-2009ம் ஆண்டுகளில் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் பலியானவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வைத்துள்ளனர். இதில் தென்காசி போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் 2007ம் ஆண்டு 73 வாகன விபத்துகள் நடந்ததில் 15 பேர் இறந்தனர். 73 பேர் காயமடைந்தனர். 2008ம் ஆண்டு 58 விபத்துகள் நடந்தன. இதில் 7 பேர் இறந்தனர். 82 பேர் காயமடைந்தனர். 2009ம் ஆண்டு 67 விபத்துகள் நடந்தன. இதில் 7 பேர் இறந்தனர். 92 பேர் காயமடைந்தனர்.

குற்றாலம் விபத்துக்கள்
குற்றாலத்தில் 2007ம் ஆண்டு 53 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 10 பேர் இறந்தனர். 142 பேர் காயமடைந்தனர். 2008ம் ஆண்டு 68 விபத்துகள் நடந்தன. இதில் 9 பேர் இறந்தனர். 100 பேர் காயமடைந்தனர். 2009ம் ஆண்டு 64 விபத்துகள் நடந்தன. இதில் 5 பேர் இறந்தனர். 96 பேர் காயமடைந்தனர்.

செங்கோட்டை பகுதிகளில்
செங்கோட்டை பகுதியில் 2007ம் ஆண்டு 27 விபத்துகள் நடந்தன. இதில் 3 பேர் இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர். 2008ம் ஆண்டு 33 விபத்துகள் நடந்தன. இதில் 6 பேர் இறந்தனர். 27 பேர் காமடைந்தனர். 2009ம் ஆண்டு 40 விபத்துகள் நடந்தன. இதில் 5 பேர் இறந்தனர். 35 பேர் காமடைந்தனர்.

குற்றாலம் நெடுஞ்சாலையில்
புளியரை பகுதியில் 2007ம் ஆண்டு 19 விபத்துகள் நடந்தன. இதில் 3 பேர் இறந்தனர். 36 பேர் காமடைந்தனர். 2008ம் ஆண்டு 21 விபத்துகள் நடந்தன. இதில் 5 பேர் இறந்தனர். 34 பேர் காயமடைந்தனர். 2009ம் ஆண்டு 27 விபத்துகள் நடந்தது. இதில் 7 பேர் இறந்தனர். 33 பேர் காயமடைந்தனர். ஆய்க்குடி பகுதியில் 2007ம் ஆண்டு 11 விபத்துகள் நடந்தன. இதில் 4 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 2008ம் ஆண்டு 13 விபத்துகள் நடந்தன. இதில் 2 பேர் இறந்தனர். 24 பேர் காயமடைந்தனர். 2009ம் ஆண்டு 25 விபத்துகள் நடந்தன. இதில் 4 பேர் இறந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள்
பாவூர்சத்திரம் பகுதியில் 2007ம் ஆண்டு 46 விபத்துகள் நடந்தன. இதில் 8 பேர் இறந்தனர். 84 பேர் காயமடைந்தனர். 2008ம் ஆண்டு 57 விபத்துகள் நடந்தன. இதில் 8 பேர் இறந்தனர். 57 பேர் காயமடைந்தனர். 2009ம் ஆண்டு 67 விபத்துகள் நடந்தன. இதில் 8 பேர் இறந்தனர். 57 பேர் காயமடைந்தனர்.

போதையின் பாதையில்
இதுபோன்ற வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக வாகனம் ஓட்டுவது ஆகும். இதுபற்றி வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு வாசகங்கள்
வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட இடங்களில் உள்ள கார் பார்க்கிங் பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கமுடியவில்லை.

சோதனைச் சாவடி
தென்காசி ஆசாத்நகர், நன்னகரம், இலஞ்சி முதலாளி குடியிருப்பு, தென்காசி-அம்பாசமுத்திரம் ரோடு-பழைய குற்றாலம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சீசன் காலத்தில் போலீசார் செக் போஸ்ட் அமைத்து குற்றாலத்திற்குள் சென்று வரும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும். வாகனங்களை அடிக்கடி சோதனை நடத்தி மதுபாட்டில்கள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும். வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

ரோந்து வாகனங்கள்
தென்காசி-நெல்லை, தென்காசி-அம்பாசமுத்திரம், குற்றாலம்-மதுரை, செங்கோட்டை-கொல்லம் சாலைகளில் ஹைவே பெடரோல் வாகன போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தினால் வாகன விபத்துகளை தவிர்க்கலாம். சுற்றுலா பயணிகள் விபத்தில்லாத சுற்றுலாவை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications