மது குடிக்காதீங்க.. அட்வைஸ் செய்த மனைவி.. நாட்டு வெடிகுண்டு விசீய கணவன்.. தென்காசியில் பகீர் சம்பவம்
தென்காசி: தென்காசி அருகே மது குடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறிய மனைவி மீது கணவர் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மது குடித்து விட்டு வந்த கணவனை.. குடிக்க வேண்டாம் அன்பாக அறிவுரை சொன்ன மனைவி மீது நாட்டு வெடிகுண்டை கணவன் விசீய திடுக்கிட வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாலிகட்டிய மனைவி என்றும் பாராமல் கொடூர மனத்துடன் நாட்டு வெடிகுண்டை மனைவி மீது கணவன் வீசிய சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் இந்த கிராமம் உள்ளது. விவசாயம் செழிப்பாக பகுதி இதுவாகும். வல்லம் கிராமத்தில் உள்ள கலைஞர் காலனியை சேர்ந்த இளைஞர் சந்தனகுமார் (வயது 33). இவரது மனைவி கவுசல்யா ( வயது 25). வல்லம் கிராமத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
கோவில் கொடை விழாவின் போது, தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தனகுமார் நேற்று முன் தினம் மது அருந்தியிருக்கிறார். மது போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்த சந்தனகுமார் சாப்பாடு கேட்டுள்ளார். கணவன் மது போதையில் வந்ததை பார்த்து கோபம் அடைந்த மனைவி கவுசல்யா, ஏன் இப்படி குடித்து விட்டு வருகிறீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தால் வேதனை அடைந்த கவுசல்யா, தனது கணவர் சந்தனகுமாருக்கு சாப்பாடு வைத்து கொடுத்து விட்டு, எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்லி புறப்பட்டு இருக்கிறார். மதுபோதையில் இருந்த சந்தனகுமார் மனைவியிடம் மீண்டும் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. ஆத்திரத்தில், பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து தனது மனைவி கவுசல்யா மீது சந்தனகுமார் வீசியுள்ளார்.

வெடி குண்டு வெடித்ததில், கவுசல்யா தலையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் கவுசல்யா சத்தம் போட்டார். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கவுசல்யாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தென்காசி அரசு மருத்துவமனையில் கவுசல்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவுசல்யா செங்கோட்டை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தனகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதையில் வந்ததை தட்டி கேட்டதற்காக கட்டிய மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications