மாவட்டச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி! தென்காசி திமுக நிர்வாகியை கட்டம் கட்டிய துரைமுருகன்!
தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரையை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் துரைமுருகன்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ராஜாவுக்கு எதிராக வெள்ளத்துரை தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கையை துரைமுருகன் எடுத்துள்ளார். குருக்கல்பட்டியை சேர்ந்த வெள்ளத்துரை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை மாற்றக்கோரியும் கடந்த வாரம் ஒரு பெரிய கூட்டத்துடன் அண்ணா அறிவாலயம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகார் காரணமாக மாவட்டச் செயலாளர் ராஜா மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த வெள்ளத்துரைக்கு கடைசியில் அதுவே பேக் ஃபயராக மாறிவிட்டது. மாவட்டச் செயலாளர் ஈ.ராஜாவுக்கு எதிராக வாசுதேவநல்லூரில் வெள்ளத்துரை நடத்தியக் கூட்டம் தான் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி கட்சியிலிருந்து நீக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; '' தென்காசி வடக்கு மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் , கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.'' இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜா நியமனம் செய்யப்பட்டது முதல் அவருக்கு எதிராக அண்ணா அறிவாலயத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் சங்கரன்கோவிலை சேர்ந்த திமுக கவுன்சிலர் ஒருவரே மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தது கவனிக்கத்தக்கது.
இதனிடையே தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சித் தலைமைக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே திமுக பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications