சென்னை விமான நிலையத்தில் அழகிரியை 10 நிமிடம் சந்தித்துப் பேசிய துரைமுருகன்...!
சென்னை: சென்னையிலிருந்து நேற்று மதுரைக்குக் கிளம்பிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் அமைச்சரும், திமுக முக்கியப் புள்ளிகளில் ஒருவருமான துரைமுருகன் திடீரென சந்தித்துப் பேசியது பல்வேறு கிசுகிசுப்புகளை கிளப்பி விட்டுள்ளது.
திமுக தலைமை தரப்பில் துரைமுருகன் மூலம் ஏதாவது சமரசத்திற்கு முயல்கிறார்களா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
துரைமுருகன் - அழகிரியின் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை, தெரிவிக்கப்படவும் இல்லை.

மதுரைக்குக் கிளம்பினார் அழகிரி
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்றுக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் அழகிரி.

30ம் தேதி பிரளயம் வெடிக்குமா...
ஜனவரி 30ம் தேதி அவரது பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது ரசிகர்கள் மதுரையை கலக்க தீர்மானித்துள்ளனர். அழகிரியும், 30ம் தேதி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகப் பேசப் போவதாக அறிவித்துள்ளார்.

தடபுடல் வழியனுப்பு
இந்த நிலையில் நேற்று மதுரைக்குப் போவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அழகிரி வந்தபோது அவருக்கு அங்கு தடபுடலான வழியனுப்பு நடத்தப்பட்டது. மேளதாளம் முழங்க அவரது ஆதரவாளர்கள் அழகிரிக்கு வழியனுப்பு நடத்தினர்.

திடீரென வந்த துரைமுருகன்
அப்போது திடீரென திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அங்கு வந்தார். அவர் அழகிரியை சந்தித்துத் தனியாகப் பேசினார். சுமார் பத்து நிமிடங்கள் பேசினார்.

சமரசம் பேசவா...
அழகிரியை துரைமுருகன் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைமை சமசரத்திற்கு முயல்கிறதா என்ற எதிர்பார்ப்பையும், கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

ஸ்டாலினுக்குத் தெரியுமா...
துரைமுருகன், அழகிரியைச் சந்தித்தது முன்னரே ஸ்டாலினுக்குத் தெரியுமா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. அல்லது தானாக வந்து அவர் அழகிரியைச் சந்தித்தாரா என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications