கருணாநிதி அறிக்கை விட்ட சில மணி நேரத்தில் திரிபாதிக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பாதுகாப்பில்தான் கரூர் அன்புநாதன் பாதுகாப்பாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்து அறிக்கை விட்ட சில மணி நேரத்தில் அவரை இடமாற்றம் செய்து அந்த இடத்திற்கு சைலேந்திர பாபுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

திரிபாதியின் பாதுகாப்பில் அன்புநாதன் பாதுகாப்பாக இருப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் திரிபாதி இடமாற்றம் செய்யப்பட்டு வி்ட்டார்.

EC acted on Karunanidhi's statement on ADGP Tripathy

முன்னதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு ஓரு முறை "கெலிகாப்டரில்" பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் நம்மைப் பார்த்துத் தான் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்; ஏதோ கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்ததைப் போல நினைத்துக் கொண்டு! கடந்த ஐந்தாண்டு காலத்தில், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தானே தமிழகத்திலே நடந்தது. எனவே கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கும், முறைகேடுகளுக்கும், ஊழல் கொள்ளைகளுக்கும் அவர் தான் பொறுப்பு. அவர் தான் மக்களுக்கு அதற்கான விளக்கம் தர வேண்டும். தருகிறாரா?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடைபெற்ற இமாலயப் தவறுகள் கூட பிறகு இருக்கட்டும்; தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது?

வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் - 45 இடங்களில் சோதனை என்று ஒரு நாளிதழ் செய்தி கூறுகிறது.

EC acted on Karunanidhi's statement on ADGP Tripathy

தமிழக சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரித் துறை துணை இயக்குனர் தலைமையில், ஒரு உதவி கமிஷனர், ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம் பெற்ற படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் சில வாரங்களாக, பண நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். கரூரில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. கரூரில் அன்பு நாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இது வரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங் களில் விசாரித்த போது, "அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்" எனத் தகவல்கள் கிடைத்தன" என்று அந்த இதழ் செய்தி வெளியிட்டு ஒரு வாரம் ஆகிறது.

அதே இதழில் வெளி வந்த மற்றொரு செய்தியில், "தமிழகம் முழுவதும் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகச் சந்தேதிக்கப்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, "கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தகவல்கள் அந்த நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன. இந்தத் தகவல்கள் வருமான வரித் துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன. செய்திகள் வந்து ஒரு வாரம் ஆகியும், தமிழக அரசின் சார்பில் இதற்கு ஏன் விளக்கம் அளிக்க வில்லை? அன்புநாதன் யார்? அவர் தற்போது எங்கே? தமிழகத்தில் காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா? அதற்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் யார்? ஊருக்கு ஊர் மணிக் கணக்கில் பேசுகின்ற அந்த உத்தமமான முதலமைச்சர், இதைப் பற்றி ஏன் வாயே திறக்கவில்லை? யாருடைய கையிலேயோ தேள் கொட்டியது போன்ற நிலையா?

நாளேடுகளில் வந்த செய்திகளில், "அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன் தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது. அவர்கள் சுதாரித்து, இரவே பல கோடி ரூபாயை வேறு இடங்களில் பதுக்கியதாகவும் தெரிகிறது. அன்பு நாதன் குடோனில் இருந்து 10.33 இலட்சமும், வீட்டிலிருந்து 4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றி தேர்தல் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்" என்றும் உள்ளது. குறிப்பாக இந்த அன்புநாதன் ஒருசில முக்கிய அமைச்சர்களின் பினாமி என்றும், அந்த அமைச்சர்கள் அவரது இல்லத்திற்கு வந்ததெல்லாம் காமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அந்தக் காமராவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச்சர்கள் தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை பல இடங்களுக்கு அனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரை தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவே வைத்திருப்பதாகவும், அமைச்சரின் "பாஸ்போர்ட்டை" சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம் என்றும், நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள் இன்று வரை அமைச்சர்களாலோ, முதல்வராலோ மறுக்கப் படவில்லையே; ஏன்? மறுப்பதற்குப் பூர்வாங்க அடிப்படை எதுவும் இருந்தால் தானே! முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பதாலா?

வருமான வரித் துறை அதிகாரிகள், அன்புநாதன் வீட்டில் சோதனை முடித்ததும், மாலையில் வேலாயுதம்பாளையம் அருகே அன்புநாதனின் நண்பர் மணிமாறன் என்பவரின் தொழிற்சாலையிலும் சோதனை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகக் காவல் துறையினரின் பார்வையிலிருந்தும், வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும் அன்புநாதன் மாயமாகியிருக்கிறார் என்றால் அதற்கு மூல காரணம் யார்? அவரைத் தப்ப விட்ட புனிதர்கள் யார்? தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி அவரால் எப்படி தப்ப முடியும்? இதற்கெல்லாம் பதில் என்ன? காவல் துறை பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் கடந்த ஒரு வார காலமாக இது பற்றி யெல்லாம் வாய் திறக்க வில்லையே ஏன்? இதைப் பற்றி யெல்லாம் வாயைத் திறந்தால் ஊரே நாறும் என்பதாலா?

தமிழகத்தில் இது ஒரு சம்பவம் மட்டுமா? கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால், அதற்கு மறுநாளே சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும், ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வரவில்லையா? தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் என்றும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா? இவ்வளவு தானா?

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறதே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐந்து மாநிலங்களில் மொத்தம் 133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் 68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அது அ.தி.மு.க. அரசுக்கு மற்றொரு பெருமை அல்லவா? தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறதா இல்லையா?

8-4-2016 அன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்புசெல்வம், அப்பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் காரைச் சோதனை செய்ததில் ரூபாய் பத்து இலட்சத்தை பறிமுதல் செய்து, அந்தத் தகவலை மாவட்டக் கலெக்டர் ராஜேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர், வேட்பாளரை விடுவிக்கவும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அன்புச் செல்வம் கூறியும் கலெக்டர் அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

22-4-2016 அன்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் வாகன சோதனை நடத்திய போது ஒரு சொகுசு காரிலிருந்து 58 இலட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளார்.

24-4-2016 அன்று கோவை மாநகராட்சி 9வது வார்டு அதிமுக கவுன்சிலர் வக்கீல் ராஜேந்திரன் வீட்டில், தேர்தல் பிரிவு அதிகாரி மோகனசுந்தரம், வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். என்னென்ன சிக்கியது என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளார்கள்.

27-4-2016 அன்று ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது நிதி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராமல் வைத்திருந்த 11 இலட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளார்கள்.

அதே நாளில், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலர் அனுபியாஸ், கோவை மண்டல வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறுவினரும், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பருமான டாக்டர் மகேந்திரன் என்பவரின் பண்ணை வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவில் 2 பெரிய சூட்கேஸ்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.. ஆனால் என்னென்ன சிக்கியது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டார்களாம்.

அ.தி.மு.க.வினருக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டும், எந்த நிகழ்விலும் முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை என்பதும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் நாட்டின் சட்ட விதிமுறைகளையே நசுக்கும் நாசச் செயல். அதனால் தான் நான் ஏற்கனவே அன்பு நாதன் நிகழ்விலேயே சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தமிழகத்தில் இதுவரை தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனைகள் அனைத்திலும் சி.பி.ஐ. யே தலையிட்டு கைது, வாக்குமூலம், புலன் விசாரணை போன்ற வழக்கமான நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்!

இவ்வாறு சோதனைகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்கும் பணியிலே ஈடுபடுவார்களோ என்ற எண்ணம் தான் எங்கும் உள்ளது. அ.தி.மு.க. வினருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லங்களில் நடைபெறும் இத்தகைய சோதனைகளைத் தொடர்ந்து எந்தவிதமான நடவடிக்கையும் மத்திய - மாநில அரசுகளால் எடுக்கப்படாத காரணத்தால், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் நடந்ததைப் போல அவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்திச் சட்டத்தை வளைத்துத் தாமதப்படுத்தி எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசையால் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால், நான் முதலில் குறிப்பிட்ட கரூர் அன்பு நாதன் தற்போது எங்கிருக்கிறார் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர் எதையும் திரிக்கும் திறமை பெற்ற சில காவல் துறையினரின் பாதுகாப்போடு அமைச்சருக்கு வேண்டிய இடத்திலேயே பதுங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஊழல்கள் பற்றியோ, அமைச்சர்களுக்கும் இந்த அன்பு நாதனுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றியோ ஆட்சிக் கட்டிலிலே இருப்போரோ, முதலமைச்சரோ எந்த விதமான பதிலும் சொல்லாமல் மயான அமைதி காப்பதிலிருந்து பத்திரிகைகளிலே வந்துள்ள செய்திகள் அத்தனையும் உண்மை தான், உண்மையன்றி வேறில்லை என்று எண்ண வேண்டியுள்ளது. ஆட்சியினருக்கும் அன்புநாதனுக்கும் சம்மந்தம் இல்லை என்றால் அதை ஏன் இது நாள் வரை தெரிவிக்கவில்லை; ஏடுகளிலே வந்த பெரிய குற்றச்சாட்டை மறுக்கவும் இல்லை.

ஆனாலும் முதலமைச்சர், அந்த அமைச்சர்கள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, அமைச்சர்களின் தவறுகளில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமோ, அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களோ என்ற எண்ணத்தையும் பரவலாக ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் பதில் கூறுகிறார்களோ, இல்லையோ, வாக்காளப் பெருமக்கள், இந்தத் தொடர் செய்திகளை யெல்லாம் நன்றாகப் படித்து, எப்படிப்பட்ட பொய்யர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக நம்மை ஆண்டு வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, வருகின்ற தேர்தலில் இப்படிப்பட்ட மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் பிரதமர் மோடி அவர்களின் அரசு இனியும் மௌனம் சாதிப்பதா என்று நாட்டு மக்கள் கருதுவதையும், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

இந்த அறிக்கைக்குப் பின்னர்தான் திரிபாதி மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+