லோக்சபா தேர்தல் பராக்.. பராக் - அரசு அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது
நெல்லை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி விட்டது. மாவட்டம் தோறும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2014ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 தொகுதியுமாக 40 தொகுதிகள் உள்ளன. தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்கும் வகையில் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுப்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்தல், தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதிகள், தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களை பெறுதல், அதற்கான விதிமுறைகள், கட்சிகொடிகள், பேனர்கள் வைப்பதை பார்வையிடுதல், செலவு கணக்குளை ஆய்வு செய்தல் போன்ற தகவல் தொடர்பாக தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்த வகையில் ஆய்வு குழு அலுவலர் தியாகராஜன், நேர் முக உதவியாளர் (சட்டப்பணிகள்) செல்வகணபதி ஆகியோர் இந்த பயிற்சிகளை பெற்றனர்.
இவவாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற அலுவலர்களை வைத்து மற்ற துறை அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் சமயமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரோகிணி ராமதாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications