எவ்வளவு நாள் தான் பொறுப்பது? பல்லைக் கடிக்கும் எடப்பாடி.. “அடுத்து அங்கதான்”.. மாஜி சூசகம்! ரைட்டு!
சென்னை : சட்டப்பேரவையில் தற்போது எடப்பாடி - ஓபிஎஸ் இருக்கைகள் அருகருகே இருந்து வரும் சூழலில், பல முறை கோரிக்கை வைத்தும் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற சபாநாயகர் அப்பாவு மறுத்து வருவதால், நீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் இதனை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கனவே நியமிக்கப்பட்டனர். அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கவிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்தனர்.

மாற்றாத அப்பாவு : இது தொடர்பாக பாநாயகர் அப்பாவுவிடமும் அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திப்போட்ட அப்பாவு, ஓபிஎஸ் இருக்கையை மாற்றவில்லை.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியே சட்டமன்ற விதிகளில் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும் என்றும், சட்டமன்ற இருக்கை விவகாரங்களில் யாருடைய அழுத்தத்தையும் ஏற்க முடியாது என்றும் அப்பாவு அறிவித்தார். இதனால், இருக்கைகள் மாற்றப்படாமல், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்து வருகிறார்.

கைகலப்பு லெவலுக்கு : சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிராக மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கியதால் சட்டமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதில்லை. அரசியல் ரீதியாக விரோதிகளாகச் செயல்பட்டு வரும் ஓபிஎஸ் தனக்கு அருகிலேயே இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பிரச்சனை எழுப்பினார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை, மரபு அடிப்படையில், பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கத்தை அவையில் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கோர்ட் படியேறும் எடப்பாடி : இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்துப் பேசுகையில், "சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அதர்ம போக்குடன் செயல்படுகிறார். உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுக்கும்போது சட்டமன்றத்தில் அதற்கு மாறுபட்டு முடிவை சபாநாயகர் எடுப்பது தவறு" எனக் கூறினார்.

மேலும், "வெகு விரைவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும். இல்லையெனில் மீண்டும் நீதிமன்றம் சென்று முடிவை எடுக்கும் நிலைக்கு அதிமுகவைத் தள்ள வேண்டாம்" எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் மாஃபா பாண்டியராஜன். இதன் முலம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளது தெரிய வருகிறது. பொதுக்குழு முடிவுகளை ஏற்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் முடிவு கூறும் வரை காத்திருப்பார்களா? அல்லது அதற்கு முன்பே நீதிமன்றத்தை நாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications