எடப்பாடி பழனிசாமி vs சிவி சண்முகம்.. யார் பதவி போகும்.. அதிமுக பொதுக்குழுவில் தெரியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தான் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி டீமின் எதிர்காலமே இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியின் தலை தப்புமா என்பதும் பொதுக்குழுவின் கையில் தான் உள்ளது. ஏனெனில் அதிமுக சட்டவிதிகளின்படி கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக 'பொதுக்குழு' இருக்கிறது கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக அல்லது சில முக்கிய முடிவுகளில் அவரை விடவும் ஒட்டுமொத்த பொதுக்குழுவின் கூட்டு முடிவிற்கே சட்டப்பூர்வமாக அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. அதனால் தான் சிவி சண்முகம் தரப்பு, பொதுக்குழு முடிவிற்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைப் போட்டிகளின் போது (உதாரணமாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் சட்டப் போராட்டம்), சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அதில் நீதிமன்றங்கள் எளிதில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளன. இதன் மூலம் அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழுவின் உச்ச அதிகாரம் சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

edappadi Palaniswami CV Shanmugam AIADMK

ஏன் இப்போது பொதுக்குழுவைபற்றி விவாதம் என்றால், விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள, முன்னாள் அமைடிசசர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்பட 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு மனு அளித்துள்ளார். மறுபுறம் அவர்களின் மாவட்ட பொறுப்புகளையும் பறித்துள்ளார். இந்த சூழலில் பொதுக்குழுவில் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று சிவி சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் 82 பேரில் 73 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினார்கள். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அவர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன், சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஒரு படுத்தோல்வியை சந்தித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் தோல்வியை இந்த இயக்கம் சந்தித்து வருகிறது.

தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்கு கலந்தாலோசிக்க வேண்டும். இந்த இயக்கத்துக்கு புத்துயிரூட்டி மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோது, எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி வையுங்கள் என்று அவரிடம் வலியுறுத்தினோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க த.வெ.க.வும் விரும்பியது. ஆனால் அவர்களை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தினார். த.வெ.க.வை மட்டுமல்ல தே.மு.தி.க.வையும் கூட்டணியில் சேர்க்க அவருக்கு மனம் இல்லை. தே.மு.தி.க.வை அரை சதவீதம் வாக்கு உள்ள கட்சி என்று கூறினார்.

தி.மு.க.வில் இணைவதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம், 'எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம். நான் கடைசிவரையில் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கிறேன்' என்று சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

தற்போது 'அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் திருந்தினால் தாயுள்ளத்தோடு மீண்டும் ஏற்றுக்கொள்வோம்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை கடந்த காலத்தில் செய்திருந்தால், இன்றைக்கு இந்த நிலைமை அ.தி.மு.க.வுக்கு வந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வந்திருப்பார். இல்லையென்றால் அவருடைய கண் அசைவில் ஆட்சி அமைந்திருக்கும்.

எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஆனால் நாங்கள் தவறு செய்தது போன்றும், துரோகம் விளைவித்தது போன்றும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி எங்களை கட்சி பதவியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு புறம்பானது. ஒரு இயக்கம் பிளவுபட்டால் அந்தந்த பொறுப்பில் இருப்பவர்கள்தான் தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட இயக்கத்தை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டும். பிரிந்து சென்றவர்களையும், நீக்கப்பட்டவர்களையும் கட்சியில் சேர்த்து பேச வேண்டும். பொதுக்குழுவை கூட்டி விவாதியுங்கள். அதில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தலைவணங்கி நாங்கள் ஏற்று கொள்வோம்" இவ்வாறு அவர் கூறினார்.

இதன்படி பார்த்தால், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சிவி சண்முகம் தரப்பு கூறுகிறது. ஒருவேளை சிவி சண்முகம் தரப்பு முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தால், எடப்பாடி பழனிசாமியின் பதவியே பறிபோகும்வாய்ப்பும் உள்ளது. அதேபோல்
கட்சியின் பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அவர் கூட்டாத பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கோரிக்கை விடுத்தால், 30 நாட்களுக்குள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய கட்டாயம் தலைமைக்கு உண்டு. கட்சியின் தலைமைக்கு எதிராகவோ அல்லது அவசர முடிவுகள் எடுக்கவோ இந்த விதி பயன்படுத்தப்படும். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்குவதோ அல்லது மீண்டும் சேர்ப்பதோ பொதுக்குழுவின் தீர்மானங்கள் மூலமாகவே இறுதி வடிவம் பெறும்

அ.தி.மு.க.வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர், கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சாதாரண 'அடிப்படை உறுப்பினர்களுக்கு' மட்டுமே இருக்க வேண்டும் என்று விதிவகுத்தார். ஆனால், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகம், சட்ட திருத்தங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தீர்மானிக்கும் உச்சகட்ட "அதிகார மையமாக" பொதுக்குழுவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே அதிமுக பொதுக்குழுவில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி டீமின் எதிர்காலமே இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியின் தலை தப்புமா என்பதும் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+