சேலம் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற 4000 பேரிடம் கையெழுத்து... 100 அடி நீள மனு!
சேலம்: சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, 4 ஆயிரம் பேர் கையெழுத்து போட்ட 100 அடி நீளமுள்ள கோரிக்கை மனுவை மேயர் சவுண்டப்பனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கினர்.
சேலம் மாநகராட்சி மையத்தில் நேற்று மேயர் சவுண்டப்பன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் பிரவீன்குமார், மாநகர குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், வெங்கடேஷ், கதிர்வேல், கிளை செயலாளர்கள் ஞானவேல், மேகராஜ் உள்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

பின்னர், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்தை பேணக் கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் சுமார் 4 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட 100 அடி நீளமுள்ள மனு இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேயரிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கையெழுத்துக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் என 4 ஆயிரம் பேரிடம் வாங்கபப்ட்டதாகும்.
மேலும், அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையத்தை தங்களது மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. சாக்கடை, கழிவுகளை சுத்தம் செய்வதில்லை. குடிநீர் போதியளவு கிடைப்பதில்லை. பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பதில்லை. பேருந்து நிலையத்திற்குள்ளேயும் அனுமதி பெறாத சில கடைகள் இயங்கி வருகிறது. இந்த முறைகேடுகள் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துணையோடு நடைபெறுகிறது. எனவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு முறைகேடு, சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் மேயர் சவுண்டப்பன் பெற்றுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் அசோகன், ரவி, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications