அடிச்சு தூக்க போகுது அதிமுக.. இருங்க பாய்.. ‘அண்ணன்’ வர்றாராமே! ஆனாலும் ஒரு சிக்கல்! ’அவர்’ வருவாரா?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நிலையில் 2026 தேர்தல் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் சவால் ஆனதாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருக்கும் நிலையில், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர தீவிரம் காட்டுகிறார். இது ஒரு புறம் இருக்க எட்டு சதவீத வாக்குகளை கையில் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானை அதிமுகவில் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றிகரமாக நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்தார். ஆனால் ஆட்சியில் இருந்தபோதும் ஆட்சியை இழந்த பிறகும் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற முடியவில்லை.
குறிப்பாக மக்களவைத் தேர்தல்களில் அதிமுக மண்ணை கவ்வியது. இந்த நிலையில் 2026இல் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும், தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீர்மானமாக இருக்கிறார்.

எடப்பாடி கூட்டணி
இதற்காக பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் பாஜக கூட்டணியில் அவர் இணைந்திருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜக - தேமுதிக - பாமக கூட்டணி ஒன்றாக இல்லாத நிலையில், பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர். சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் பாஜக வேட்பாளர்களை மூன்றாம் இடத்திற்கு தள்ளினர். இப்படியாக இரு கட்சிகளும் கடந்த தேர்தலில் நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட்டால் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம்.
அதிமுக திட்டம்
அதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். தற்போது பாஜக கூட்டணி என்றாலும் அதிமுக தான் தலைமை தாங்கும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான், ஆனால் அதிமுக அரசு என தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தற்போது பாஜகவும் தமாகவும் மட்டுமே இருக்கின்றது. இதனால் கூட்டணியை வலிமைப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார்.
2026 தேர்தல்
கடந்த முறை பல தொகுதிகளில் குறைந்த அளவிலான வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது அப்படி நடக்கக் கூடாது என்றும் திமுகவுக்கு எதிராக இருக்கும் அரசியல் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக திட்டமிட்டு இருக்கிறது. இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பிலிருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கின்றனர். பாமக, தேமுதிக நிச்சயம் வரவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார்.
டிடிவி தினகரன்
அதே நேரத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணிக்குள் வர வேண்டுமென பாஜக விரும்பினாலும், எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் அமைதியாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என பாஜக சொல்லி இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் டிடிவி தொடர்பான வழக்குகளை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டது.
சீமானுடன் பேச்சு
இப்படியாக பல விவகாரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமானையும் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக சீனியர்கள் விரும்புகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் அதனைத் தான் விரும்புகிறார். ஆனால் பாஜக கூட்டணியில் இருப்பதால் நாம் தமிழர் கட்சி உள்ளே வருவது சிரமம் தான். அதே நேரத்தில் நாங்கள்தானே கூட்டணிக்கு தலைமை வகிக்கிறோம். எங்கள் கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. அதனால் நம்பி வரலாம் என நாம் தமிழர் கட்சியினர் உடன் அதிமுகவினர் பேச தொடங்கி இருக்கின்றனர்.
தமிழக அரசியல்
எட்டு சதவீதத்திற்கும் மேல் நாம் தமிழர் கட்சி வாக்கு வாங்கி இருந்தது. தமிழகம் முழுவதும் அந்த கட்சிக்கு தொண்டர் படை இருக்கிறது. ஆனால் இதுவரை சட்டமன்றத்திற்குள் அந்த கட்சி நுழைய முடியவில்லை. இதனால் 2026 தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைத்தால் சட்டசபைக்குள் எம்எல்ஏக்களை அழைத்துச் செல்ல வேண்டியது எங்கள் கடமை என அதிமுக உறுதி சொன்னதாம். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்து தான் போட்டியென அடிக்கடி பேசி வருகிறார். விரைவில் நாம் தமிழர் கட்சியின் தலமையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தொடர்பு கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி
இதே போல சாதிக் கட்சிகள், அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்டவற்றையும் சந்தித்து பேசி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு பெற முயற்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருந்தாலும் தற்போதைய கூட்டணியை பலப்படுத்தி விட்டால் அடுத்த ஆண்டு வரை பலமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படலாம். மேலும் தற்போது கூட்டணியை ஒருங்கிணைக்காவிட்டால் தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்போது அதிமுக பலவீனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யலாம் என்பதால் அதனை தவிர்க்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை தீவிர படுத்த முயன்று வருகிறார்.
அதிமுக கூட்டணி
இப்படியாக தற்போது கூட்டணியை பலப்படுத்திவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம். அதே நேரத்தில் பாஜகவின் அழுத்தத்தால் சில விவகாரங்களில் விட்டுக் கொடுத்தும் போக வேண்டிய சூழல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சொந்தக் கட்சியிலும் சில சிக்கல்களை எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொண்டு வருகிறார்.
அதிமுக வாக்கு வங்கி
கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பலரே படுதோல்வியை சந்தித்தனர். தற்போது அவர்களது செயல்பாடுகள் நன்றாக இல்லை. இருந்த போதும் மாவட்ட செயலாளராகவும், மாநில பதவியிலும் தங்கள் ஆதரவாளர் வட்டத்தை பெருக்கி வருகின்றனர். செல்வாக்குள்ள பல இளைஞர்கள் கட்சியில் இருந்தும் அவர்கள் வெளியே தெரிவதில்லை. வெளியே தெரிந்தாலும் மாவட்ட செயலாளர்கள் அவர்களை ஓரம் கட்டி விடுகிறார்கள். இதனால் கூட்டணி விவகாரங்களை விட உட் கட்சி விவகாரங்களை கவனிப்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய வேலையாக இருக்கிறதாம்.
எடப்பாடி மகன்
இதன் காரணமாக தனது மகனையும் களத்தில் இறக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது தலைமையின் கீழ் ஒரு குறிப்பிட்ட நிறுவனம், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்கள் ஆகியோரைக் கண்காணித்து அவர்கள் குறித்து தொண்டர்களிடம் ரகசியமாக பேசி வருகிறது என்றும் கூறுகின்றனர் அதிமுகவினர். இதனால் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் மகனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications