ஒரே நாளில் 2 பள்ளி மாணவர்கள் கொலை.. அடிப்படையிலேயே பிரச்சனை.. ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி காட்டம்
சென்னை: ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மோதலில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அஞ்செட்டி பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஜூலை 2 ஆம் தேதி கடத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை சிறுவன் சடலமாக காட்டு பகுதியில் மீட்கப்பட்டு இருக்கிறார். கடத்தல் குறித்து புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசுப் பள்ளி மாணவர் ஆதித்யா, மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆதித்யாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே பள்ளிக்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது; இந்த மோதலில் மாணவன் ஆதித்யா கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அதனாலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஆதித்யா, பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய பொம்மை முதல்வருக்கு உறுத்தவில்லையா?
மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
"இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?" என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, "இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?" என்பதில் மாற்ற வேண்டும் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications