நீட் ரத்தானால்தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்நிலையில், நீட் ரத்து செய்யப்பட்டால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று பேச தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், "மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருந்தார்.

டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூடச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?" என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?
தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் முதல்வரே!
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications