‘சமக’விலிருந்து விலகி இன்னொரு ‘சமக’வைத் தொடங்கிய எர்ணாவூர் நாராயணன்!
சென்னை: சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து வந்த எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர் எர்ணாவூர் நாராயணன்.
இந்நிலையில், இன்று சென்னையில் அவர் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். தனது புதிய கட்சிக்கு சமத்துவ மக்கள் கழகம் எனப் பெயரிட்டுள்ள அவர், தனது கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

இந்தக் கொடியில் மேல்புறம் சிவப்பு, கீழ்புறம் மஞ்சள் நிறத்துடன் நடுவில் வெள்ளை வட்டத்திற்குள் 'பிரமிடு' வடிவிலான கூம்பு சின்னம் இடம் பெற்று உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் எர்ணாவூர் நாராயணன் பேசியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். மீண்டும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலர பாடுபடுவோம். எங்களது இயக்கம் சார்பில் அவருக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை வழங்குவோம்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் எதுவும் கேட்கவில்லை. வாய்ப்பு கொடுத்தால் கட்டாயம் போட்டியிடுவோம்.
சரத்குமார் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டி யிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் தான் அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்தார். இம்முறை சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications