இது சாதனையா இல்லை வேதனையா.. அதிமுகவைப் பார்த்துக் கேட்கிறார் இளங்கோவன்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது? இந்நிலையில் அதிமுகவினர் நான்காண்டுகால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குறியது. அதை விட நான்காண்டுகால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தவறான தகவல்களை வழங்கியிருக்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.
அதிமுக ஆட்சியமைந்து புதிய மின்உற்பத்தி திட்டத்திற்காக முதலீடு செய்திருக்கிறது. இதுவரை 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமும் கடந்த திமுக ஆட்சியில் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலமாக உற்பத்தி செய்யப்ட்ட மின்சாரம்தான். அதை தனது சாதனைகளாக கூறுவதற்கு ஜெயலலிதாவிற்கு உரிமையில்லை.
இன்றைக்கு முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு பின்புதான் மின் உற்பத்தி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா புரிந்தும் புரியாமலும் பேசி வருகிறார்.

மின் பற்றாக்குறை மாநிலம்
தமிழ்நாட்டில் அனல், புனல், மின்நிலையங்கள் மூலமாகவும் மற்ற இதர வழிகளிலும் 7388 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நிறுவுதிறன் உள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் 60 சதவீதம் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 3045 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. எப்படியிருந்தாலும், ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது.

கை கொடுக்கும் காற்றாலை
இந்த பற்றாக்குறையை தற்காலிகமாக காற்றாலை மின்சாரம் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக மின்உற்பத்தி திட்டங்களில் பருவ மாறுதல்களுக்கு ஏற்பதான் காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் நமக்குக் கிடைக்கும். இதை நிரந்தரமாக நம்பியிருக்க முடியாது. நிரந்தரமாக மின் உற்பத்தி செய்யும் அனல், புனல், அணு மின்சாரத்தை நம்பி தான் ஒரு பொறுப்புள்ள அரசு செயல்பட வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரம்
ஒரு யூனிட் புனல் மின்சாரத்திற்கு 50 பைசா செலவாகிற நிலையில், சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்திற்கு ஏழு ரூபாய் விலை கொடுத்து வாங்குவது ஏன்? காற்றாலை மின்சாரத்தை ரூபாய் 6 முதல் ரூபாய் 14 வரை விலை கொடுத்து வாங்குவது அவசியம் தானா?.

நீர்மின்திட்டங்கள்
தமிழக அரசை பொறுத்தவரை நீர்மின்திட்டங்களையும், அனல்மின் திட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வருடம் முழுவதும் தண்ணீர் இருந்தும் பாபநாசம் மின்திட்டம் மின் உற்பத்தி செய்யாமல் முடங்கி கிடக்கிறது.
அதேபோல நீலகிரி குந்தா, பைக்காரா நீர் மின் திட்டமும் செயலற்று கிடக்கிறது. இத்தகைய மின்நிலையங்களில் நிறுவுதிறனில் 50 சதவீததிற்கும் குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செயற்கை மின் பற்றாக்குறை
கோடை காலத்தில் 10 சதவீதத்திற்கு கூட மின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்நிலையில் செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கி விட்டு, தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூபாய் 10,000 கோடிக்கு மேல் வாரி வழங்குவதில் ஊழல் இல்லையென்று ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா?

ஜெயலலிதாவிற்கு சவால்
இன்றைக்கு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்ததாக கூறுகிற ஜெயலலிதாவிற்கு ஒரு சவால் விட விரும்புகிறேன். 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் பம்புசெட் நிறுவ மின் இணைப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை ஜெயலலிதா மறுக்கமுடியுமா?

செயல்படாத முதல்வர்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தலைமை செயலகத்திற்கு வருவது மிகமிக குறைந்து வருகிறது. அப்படியே வருகை புரிந்தாலும் பத்திரிகையாளர்கள் பார்வையில் படாமல் அலுவலகத்திற்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு திரும்பி விடுகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லையென்று பல்வேறு செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.

முதல்வர் எங்கே?
இந்நிலையில் முதலமைச்சர் பொறுப்பேற்று ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டத்தை நடத்தவில்லை. சக அமைச்சர்கள், முதலமைச்சரை பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் தான் முதலமைச்சரை, சக அமைச்சர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.

நான்கு ஆண்டு கால வேதனை
தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது? இந்நிலையில் அதிமுகவினர் நான்காண்டுகால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குறியது. அதை விட நான்காண்டுகால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

கூட்டணியில்லை
இதனிடையே திருச்சியில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்தித்த செய்தியாளர்கள், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த இளங்கோவன், திமுகவுடன் கூட்டணி என்று கூறவில்லை. மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்துக்கட்சிகளுடன் நல்லுறவு என்றுதான் கூறினேன். தாழ்த்தப்பட்டோருக்காக போராடும்போது காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்றுதான் கூறினேன்'' என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications