தருமபுரி முருகன் கோயிலுக்குள் ஆச்சரியம்.. அதை பார்த்ததுமே திகைத்த மக்கள்.. காக்க காக்க கனகவேல் காக்க
தருமபுரி: விசித்திரமான சம்பவம் ஒன்று தருமபுரியில் நடந்துள்ளது.. யார் அந்த பக்தர் என்று தெரியவில்லை.. அவரைத்தான் ஊரே வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக, நிம்மதி தேடி கோயிலுக்கு பக்தர்கள் செல்வார்கள்.. அல்லது வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள்.. அல்லது பக்தி அதிகமாகி விட்டால் கோயிலுக்கு செல்வார்கள். அப்படி கோயிலுக்கு செல்லும்போது, தங்களுடைய வேண்டுதல்களையும் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்து சொல்வார்கள்.

குமாரசாமி: ஆனால், இந்த தருமபுரி ஆசாமி கொஞ்சம் வித்தியாசமானவர்.. குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார்.. அதற்கு பிறகு, சாமி கும்பிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதையடுத்து, கோயில் உண்டியல் காணிக்கையை கோயில் நிர்வாகத்தினர் வழக்கம்போல் எண்ணத்தொடங்கினர்... அப்போது, உண்டியலை கொட்டிப்பார்த்தபோது, ஏராளமான நோட்டுக்கள் வந்து விழுந்தன.. இதைத்தவிர, தங்கம், வெள்ளி பொருட்களும் விழுந்தன. அப்போது, திடீர்னு ஒரு வெள்ளை காகிதமும் வந்து விழுந்தது. இதைப்பார்த்ததுமே, காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தவர்கள் திகைத்து போனார்கள்..
பிரச்சனைகள்: உடனே அந்த பேப்பரை எடுத்து பிரித்து பார்த்தால், தனக்கிருக்கும் 1 கோடி ரூபாய் கடன் பிரச்சனையை, விலாவரியாக எழுதிவைத்திருந்தார் அந்த விநோத ஆசாமி.
யார் யாரிடம் கடன் வாங்கினார்? ஒவ்வொருவரிடமும் எவ்வளவு கடன் வாங்கினார்? மொத்தம் கடன் தொகை எவ்வளவு இருக்கிறது? யாருக்கு எவ்வளவு கடன்பாக்கி தர வேண்டியிருக்கிறது? என்ற கடன் விவரங்களை வரிசையாக எழுதி வைத்திருந்தார்..
கடன் தொகை: "1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் பாக்கி இருக்கிறது.. இந்த கடனை மற்றவர்களுக்கு தர வேண்டியிருக்கிறது. இவ்வளவு கடனை எப்படி அடைக்க போகிறேனோ தெரியவில்லை, சிலரிடமிருந்து ரூ.10 கோடியே 10 லட்சம் எனக்கு வர வேண்டியிருக்கிறது.. அந்த பணம் எனக்கு சீக்கிரமாக வந்து சேர வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
இறுதியாக, காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடைகள் நீங்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்று வரிகளுடன்.. முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று எழுதியிருக்கிறார்.
கோரிக்கை: இந்த கோரிக்கை மனமுருக வேண்டி, உண்டியலிலும் போட்டுவிட்டு சென்றுள்ளார் அந்த விநோத ஆசாமி. இவ்வளவு விலாவரியாக கடன் பிரச்சனையை எழுதி வைத்தவர், தன்னுடைய பெயர்? ஊர், முகவரி என எதையுமே சொல்லவில்லை. எனவே, அவர் யார் என்றும் தெரியவில்லை.. ஆனால், அவரது கோரிக்கை கடிதம் இப்போது சோஷியல் மீடியாவில் பயபக்தியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications