திருப்பதியிலிருந்து மதுரை திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- குழந்தை உட்பட 2 பேர் பலி
நாமக்கல்: ராசிபுரம் அருகே திருப்பதி சென்று திரும்பிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் குடும்பத்தினரின் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு குழந்தையும், பெண் ஒருஅரும் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி விஜய் ஆனந்த் இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை காலையில் விஜயபாஸ்கர், இவரது தம்பி விஜய்ஆனந்த் ஆகியோர் குடும்பத்துடன் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காரில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். காரை சவுந்தர் என்பவர் ஓட்டிச் சென்றார். டிரைவர் உள்பட 8 பேர் அந்த காரில் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு 8 மணியளவில் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை 5 மணியளவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு கிட்டதட்ட 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் விஜயபாஸ்கரின் மகன் 4 வயது குழந்தை தபஸ்ரஞ்சன், இவரது தம்பி விஜய் ஆனந்தின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் காரின் டிரைவர் சவுந்தர் தூங்கியிருக்கலாம் என்றும் அதனால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications