ராணிப்பேட்டையில் நொடியில் மாறிய வாழ்க்கை.. மூளைசாவு அடைந்த பெண்.. கலங்க வைத்த குடும்பத்தினர் செயல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். இதன் மூலம் அந்த பெண் பலரது உருவில் வாழ்வதால் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் .இவரது மனைவி ஜெபக்குமாரிக்கு 33 வயது ஆகிறது. ராபர்ட் ஜெபக்குமாரி தம்பதிக்கு ( ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்).

ராபர்ட்டும், ஜெபகுமாரியும் ராணிப்பேட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மாலை ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி தம்பதியினர் தொழிற்சாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
இந்நிலையில் பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெபகுமாரியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது
இதனால மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனது. சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கினார்கள். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications