டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் 2வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நேற்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். 2வது நாளாக இன்றும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 16 நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணியாக சென்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தை நடத்தினர்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இந்தப் போராட்டத்தை தொடங்கினார்கள்.
தகவல் அறிந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் போராட்டத்திற்கு வலுசேர்க்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று உறுதியுடன் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications