உதயசூரியன் வேண்டாமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்க.. ஜவாஹிருல்லாவிற்கு திமுக எதிர்ப்பு
சென்னை: திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நாகை சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிற இனி வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த திமுக சார்பில் ''எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும்'' என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின்தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தான் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது என்னவென்றால் இனி வரும் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்ற தீர்மானம் ஆகும்.
அதாவது திமுக, தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும். இதன்மூலம் அவர்கள் வெற்றி பெற்றாலும் கூட கட்சி பெயரில் வேறாக செயல்பட்டாலும் கூட சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களாக தான் கருதப்படுவார்கள். அந்த வகையில் இந்த முறை தேர்தலில் வென்ற ஜவாஹிருல்லா, மதிமுக எம்எல்ஏக்கள் திமுக எம்எல்ஏவாக தான் தொடர்கிறார். இவர்கள் திமுகவின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். கட்டுப்படாவிட்டால் தகுதி நீக்கம் கோர திமுகவின் கொறடாவிற்கு உரிமை உள்ளது.
ஆனால் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர்கள் தேர்தலில் வென்ற பிறகு திமுகவிற்கு கட்டுப்பட வேண்டாம். உதாரணமாக திமுக கூட்டணியில் வென்ற விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தனிச்சின்னத்தில் களமிறங்கி ஜெயித்த பிறகு தகெவிற்கு ஆதரவு அளித்தாலும் திமுகவால் அந்த எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அவர்களால் சுதந்திரமாக தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை தேர்வு செய்ய முடிகிறது. ஆனால் ஜவாஹிருல்லாவால் அது இப்போது முடியாது.
இப்படியான சூழலில் தான் ஜவாஹிருல்லாவின் கட்சி இனி தனி சின்னத்தில் தான் போட்டி என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது திமுகவினரை கோபப்படுத்தி உள்ளது இந்நிலையில் தான் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த நாகப்பட்டினம் ஏகேஎஸ் முருகன் பெயர், போட்டோவுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், ''நாகை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹச்.ஜவாஹிருல்லாவிற்கு வேண்டுகோள். தனிச்சின்னத்தில் நிற்கும் உங்கள் தீர்மானத்தை வரவேற்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் விருப்பப்படி மீண்டும் இதே தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுமாறு வேண்டுகிறோம்.. நாகை ஏ.கே.எஸ். முருகன், கழக தொண்டன், திமுக'' என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இன்னும் திமுக தலைமை எந்த பதிலையும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications