சுனாமி வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு: மீனவர்கள் மறியல்- சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை சாந்தோம் சாலையில் மீனவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சுனாமி வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒதுக்கீடு உத்தரவு இருந்தும் தங்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கலங்கரை விளக்கம் அருகேயுள்ள நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகைகயிட்டு புகார் அளித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு
அதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு 1,452 அடுக்குமாடி புதிய வீடுகள் கட்டித்தருவதாக தமிழக அரசு அறிவித்தது.

குடியிருப்பு தயார்
தற்போது, நொச்சிக்குப்பம் திட்டப்பகுதியில் முதற்கட்டமாக 628 புதிய குடியிருப்பு நொச்சிக் குப்பம் தென் பகுதியில் கட்டப்பட்டு அதற்கான பயனாளிகள் பட்டியலையும் குடிசை மாற்று வாரியம் வெளியிட்டது.

போலியான நபர்கள்
பட்டியலை ஆய்வு செய்தபோது, 292 வீடுகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு போலியான நபர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மீனவர்களுக்கு வீடு இல்லை
இதனால், பாரம்பரிய மீனவர்களுக்கும், போலியான பெயரில் வீடுகளை பெற்ற மாற்று சமுதாயத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை உள்ளது. எனவே, போலியான பெயர்களில் முறைகேடாக வீடுகளை பெற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
அதேபோல் போலியான ஆவணங்கள் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

சாலை மறியல்
இதனிடையே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க காலதாமதமாவதைக் கண்டித்து இன்று காலை 11 மணியளவில் கலங்கரை விளக்கம் அருகே காமராஜர் சாலையில் ஏராளமான மீனவர்கள் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
மீனவர்களின் திடீர் மறியலால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

கண்ணீர் விட்ட மீனவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள் அனைவரும் வீடு இடிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இன்றி தவிப்பதாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்காமல் வசதி படைத்தவர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு வீடுகளை கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications