பிரிட்ஜோ கொலைக்கு நியாயம் கோரி ... 6 மாவட்ட மீனவர்கள் ஸ்டிரைக்!
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி, தமிழக மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 7 நாள்களாக தங்கச்சிமடத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ரனர்.

மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரிட்ஜோவின் உடலை பெற மாட்டோம் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடடு வந்தனர். இந்நிலையில் தங்கச்சிமடத்துக்கு நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். அங்கு அவர்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உடலை பெற முடிவு
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள பிரிட்ஜோவின் உடலை பெற்று இன்று மாலை நல்லடக்கம் செய்யவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இன்று வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று தமிழகத்தில் 6 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுக்குள் செல்லவில்லை
மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 1,000 விசைப்படகுகளும், 5,000 நாட்டுப் படகுகளும் கடலுக்குள் செல்லவில்லை.

உண்ணாவிரதம்
தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். குமரியைச் சேர்ந்த 43 கிராமங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications