பொத்துக்கிட்டு ஊத்துது வானம்.. ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள்.. குளிக்க முடியாது பாஸ்!
குற்றாலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த மழை தற்போது வலுப்பெற்று கனமழையாக பெய்து வருகிறது.

இதன்காரணமாக இன்று காலை குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த தண்ணீர் திடீர் என அதிகரித்தது. அருவியில் குளித்தவர்களை பாதுகாப்பு போலீசார் அப்புறப்படுத்திய சில நிமிடங்களில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆக்ரோசமாக தண்ணீர் கொட்டியது.
இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். கடந்த சிலதினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் குற்றால அருவிப் பகுதியில் தொழில் செய்து வரும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அருவியில் வரும் தண்ணீர் கலங்கலாக கழிவு நீராக வருவதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் ஐந்தருவி,பழையகுற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இங்குள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கும் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications