தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை.. இதுவரை இல்லாத வெயில் அளவு.. அரக்கோணத்தில் 115 டிகிரி
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வரும் நிலையில், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிக அதிகபட்ச வெப்பநிலையாக இன்று அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாட்டி வதைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம் படிப்படியாக உயர்ந்து தற்போது உக்கிரத்தை தொட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் வெப்ப நிலை பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு வெப்பமும் புழுக்கமும் அதிகரித்து மக்களை கசக்கி பிழிந்து வருகிறது.
இடையில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை பெய்து வெப்பத்தை சற்று தணித்தது. அதன்பிறகு மீண்டும் வெப்பநிலை உயரத் தொடங்கியது. அதுவும் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் உக்கிரமாக இருந்தது. இதற்கிடையில், மோக்கா புயல் ஏற்படுத்திய தாக்கம் வெப்பத்தை மேலும் அதிகரிக்க வைத்தது. இதனால், கடந்த சில தினங்களாக வெப்பம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் பகல் இரவு பாராமல் வெப்பத்தின் தாக்கம் உள்ளது. குறிப்பாக நேற்று தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அரக்கோணத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ஏற்கனவே அறிவித்தபடி மோக்கா புயல் கரையை கடக்கும் போது வங்கக்கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தினை புயல் உறிஞ்சி இருப்பதால் இந்தியாவின் தரைப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. ஈரப்பதம் குறைந்து வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக வெயிலின் அளவு படிப்படியாக 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதியம் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் 108 டிகிரியும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 111 டிகிரியும், திண்டுக்கல் மற்றும் குடியாத்தத்தில் 109 டிகிரியும், ஆவடியில் 108 டிகிரியும், நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூரில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications