திமுக இளைஞரணி செயலர் பதவி: விட்டு கொடுத்தார் ஸ்டாலின்- புதிய செயலராக வெள்ளகோவில் சாமிநாதன் நியமனம்!
திமுக இளைஞரணி புதிய செயலராக வெள்ளகோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி செயலராக இருந்த ஸ்டாலின் செயல் தலைவரானதையடுத்து திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: திமுக இளைஞரணியின் புதிய செயலராக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞரணி செயலராக இருந்த ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி செயலராக 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக பதவி வகித்து வந்தார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் வகித்து வருகிறார்.

விட்டுக் கொடுத்த ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அக்கட்சியின் செயல் தலைவராக திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஸ்டாலின் தம் வசம் இருந்த இளைஞரணி செயலர் பதவியை விட்டு கொடுத்திருக்கிறார்.

சாமிநாதன் நியமனம்
தற்போது திமுகவின் இளைஞரணி புதிய செயலராக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ. சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞரணி இணை செயலர் பதவியில் இருந்தார்.

மாஜி அமைச்சர்
கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளகோவில் சாமிநாதன் முந்தைய திமுக அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருந்தார். சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக பின்னடைவை சந்தித்தது.

சுபா சந்திரசேகர்
இந்த நிலையில் சாமிநாதன் நியமனம், கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த உதவும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. வெள்ளகோவில் சாமிநாதன் வகித்து வந்த இளைஞரணியின் இணை செயலர் பதவிக்கு சுபா. சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications