மக்களுக்கும்,நாட்டுக்கும் உதவாத மத்திய பட்ஜெட்: ஜி.ஆர், முத்தரசன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்த உதவாத வகையில் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

'பாஜக அரசு தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையில் மக்கள் மீதான மறைமுக வரிகளை உயர்த்தியும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலைகளை தர மறுத்தும் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை வெட்டி சுருக்கியும் கல்வி, ஆரோக்கியம், குழந்தை மற்றும் மகளிர் நலன், தலித் மற்றும் பழங்குடியினர் நலன் ஆகியவற்றை புறக்கணித்தும் சொல்லொணாத் துயரங்களுக்கு மக்களை தள்ளியுள்ளது.

G.Ramakrishnan and mutharasan Condemned on union budget

நல்ல நாள் வருகிறது என்று உடுக்கை அடித்துக்கொண்டே மக்களை வாட்டி வதைக்கும் பாஜக நடவடிக்கை வரிசையில் 2016-17 க்கான மத்திய பட்ஜெட்டும் பயணிக்கிறது. வழக்கம் போல், ஏழை உழைப்பாளி மக்கள் மீது அதிக சுமையாக விழும் மறைமுக வரிகளை உயர்த்தி 20,000 கோடி ரூபாய் திரட்டுவது, மறுபுறம் செல்வந்தர்களையும் பெரும் கம்பெனிகளையும் தொடர்ந்து மகிழ்விக்கும் வகையில் நேர்முகவரிகள் சுமையை 1000 கோடி ரூபாய் குறைப்பது என்று பட்ஜெட் அமைந்துள்ளது.

நாட்டின் பெரும் பகுதி வரி வருமானம் இவ்வாறு மறைமுக வரிகள் மூலம் திரட்டப்படுவது உழைக்கும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகும். இந்த பட்ஜெட்டில் இன்னும் ஒரு படி மேலே சென்று வரி ஏய்ப்பு செய்துள்ளவர்களை கூவி அழைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளது மிகவும் மோசமான முன்மாதிரியாகும். 1997இல் அன்றைய நிதி அமைச்சர் கொண்டுவந்த இதேபோன்ற திட்டத்தை பாஜக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்ட ஒதுக்கீடுகளில் முன்னேற்றம் இல்லை. பட்ஜெட் உரையில் விவசாயம் பற்றி பசப்பான பேச்சு உள்ளது. ஆனால் பட்ஜெட் முன்மொழிவுகளும் ஒதுக்கீடுகளும் விவசாய நெருக்கடியை தீர்க்க உதவாது, மாறாக தீவிரப்படுத்தவே செய்யும். ஊராக வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு பண அளவில் சென்ற ஆண்டை விட அதிகரித்திருந்தாலும் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சரிவு தான்.

ஒரு சில ஆண்டுகளுக்குமுன் ரூபாய் 40, 000 கோடியாக இருந்த ஒதுக்கீடு ரூபாய் 38,000 கோடியாகத்தான் இந்த ஆண்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீடும் குறைந்துள்ளது. கல்வித்துறையின் நிலைமையும் இதுதான். நடப்பு ஆண்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% என்று சொல்லும் அரசு ஒதுக்கீடுகள் எதையும் அந்த அளவுக்குக்கூட உயர்த்தவில்லை. மாறாக உண்மையளவில் பல துறைகளுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன.

நிதிப்பற்றாக் குறையை குறைப்பதே நோக்கமாக கொண்டு பட்ஜெட் போடப்படுவது பன்னாட்டு நிதி மூலதனத்தை தாஜா செய்வதற்கே. இது நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் எந்த வகையிலும் உதவாது. தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மோடியின் மத்திய அரசு 2016-17 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் நிதி நிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவில்லை. பொதுத்துறை பங்குகள் விற்கப்படுதல், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குதல் தொடர்கிறது. பாதுகாப்புத்துறையில் அந்நிய மூதலீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தானது.

அரசு மற்றும் தனியார் கூட்டுத்திட்டம் மூலம் கிடைக்கும் முதலீடுகளை சார்ந்திருத்தல் தற்சார்பு பொருளாதாரத்தை முற்றிலுமாக தகர்த்து விடும். பணமதிப்பு குறைந்து வரும் நிலையில் வருமானவரி விதிப்பிற்கான வருமான அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது தொடர்கிறது. கம்பெனி சட்டம் திருத்தப்படுவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விளைநில பரப்பளவு குறைந்து வருவதும், விளை நிலங்கள் பண்ணை சாராப் பணிகளுக்கு மாற்றப்படுவதும், குறிப்பாக ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகி வருவதும் உணவு தானிய உற்பத்தியை சீர்குலைத்து உணவு பாதுகாப்பு வளையத்தை உடைத்து நொறுக்கிவிடும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் இலக்கில் 90 சதவீதம் பண்ணை சார்பு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து விடுபடவில்லை.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரி குறைக்கப்படுகின்றன. சாதாரண மக்கள் தலையில் சுமையேற்றும் மறைமுக வரிகள் உயர்த்தப்பகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கிராம வளர்ச்சி, பாசனம் மற்றும் இயற்கை வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல. வேளாண் விளை பொருட்களையும், விவசாயத்தையும் ஆன்லைன் வியாபாரத்திற்கு தள்ளிவிடுவது வேளாண்மை பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தி விடும். உயர் மருத்துவ சிகிச்சைகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளை நம்பியிருக்க நிர்பந்திக்கிறது.

மத்திய அரசின் 2016-17 ஆம் ஆண்டு பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் ஆதரவளிக்கவில்லை. பெருந்தொழில் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு நாட்டின் செல்வவளத்தையும் மனித ஆற்றலையும் பலியாக்கியுள்ளது மத்திய பட்ஜெட் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+