மே.. மே.. முதல்வர் ஸ்டாலின் காரை மறித்து ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கிய சிறுமி.. ஒரே சிரிப்பு தான்!
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யச் சென்றபோது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்துள்ளார் சிறுமி ஒருவர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வரும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனால், இந்த ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 4,700 கி.மீ தொலைவுக்கு பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சென்ற மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை, 3,800 கி.மீ தொலைவு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முதல்வர் உத்தரவின்படி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வந்தனர்.
முதல்வர் டெல்டா விசிட் : இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விண்ணமங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் கூழையாறு, நந்தியாறு வெள்ளனூரில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்றனர்.
முதல்வருக்கு சிறுமி கொடுத்த பரிசு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புள்ளம்பாடி அருகே நந்தியாறு பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் காரில் கிளம்பியபோது பொதுமக்கள் கூட்டமாக நின்றதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், ஆட்டுக்குட்டியை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். ஆட்டுக்குட்டியை முதல்வரின் கையில் அச்சிறுமி கொடுத்ததுமே ஆட்டுக்குட்டி கத்தியது. இதனால், முதல்வர் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
தனக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்த சிறுமியிடம் பெயர் கேட்டு, என்ன படிக்கிறாய் என விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமும், தூர்வாரும் பணிகள் பற்றிக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications