இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்! பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
நாமக்கல்: அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ். இந்நிலையில் தான் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கனவு ஆசிரியர் விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் கற்பித்தலில் புதுமையை புகுத்துவது மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிதாக பாடம் நடத்தும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் கனவு ஆசிரியர் விருது என்பது தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளரான மறைந்த அன்பழகன் நினைவாக அவரது பிறந்தநாளில் (டிசம்பர் 19) இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 379 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இளையாம்பாளையத்தில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: கனவு ஆசிரியர் விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் தான் ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமூகம் சிறந்து விளங்க முடியாது. இப்படி முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. அது நம் பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்'' என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
