இயேசு போல தியாகம், எளிமையை கடைபிடிப்போம்- ஆளுநர், ஓபிஎஸ், கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து
இயேசு பிரான் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வு மேன்மை பெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளா
சென்னை : கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், தீய சக்திகளை அகற்ற ஏசு கிறிஸ்து இந்த உலகில் பிறந்தார்.
இந்த நாளில் துயரத்தில் இருக்கும் மக்களையும் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களையும் காப்பாற்றுவது நமது கடமையாகும். உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட அன்பையும், கருணையையும் ஊக்கப்படுத்துவோம். எனது அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். "அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்" என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும்.

நிதி உதவி
புரட்சித் தலைவி அம்மா கிறிஸ்துவப் பெருமக்களின் நலனிற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை டிசம்பர் திங்கள் 2011 ஆம் ஆண்டு செயல்படுத்தினார்கள். கிறிஸ்துவ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

அன்பும் அமைதியும் நிலவட்டும்
கிறிஸ்துவப் பெருமக்களின் மேம்பாட்டுக்கென புரட்சித் தலைவி அம்மா வகுத்த சீரிய திட்டங்களை, புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் செயல்படும் அரசு சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இயேசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கிருஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் கிருத்துமஸ் திருநாள் 25.12.2016 அன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கிருத்துவ சமயம் பரப்ப வந்த மேலை நாட்டு மதகுருமார்கள் தமிழகத்தில் ஏழை எளியோர், குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களிடையே சமயப் பணிகள் ஆற்றியதுடன், அவர்களிடம் கல்வி, பொது சுகாதாரம் போன்றவை குறித்தும் விழிப்புணர்வுகளை வளர்த்தனர். அவர்களில் சில குருமார்கள் தமிழ் மொழியைக் கற்க முனைந்ததுடன், அதன் அருமையையும், சிறப்புகளையும் உணர்ந்து போற்றி, அதன் வளர்ச்சிக்காக மகத்தான முறையில் தொண்டு புரிந்துள்ளனர்.

தமிழ் மொழியின் பெருமை
அறிஞர் கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் தமது ஆய்வு நூலின் மூலம் முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று நிறுவினார். "தேம்பாவணி" தமிழ் இலக்கியம் தந்த வீரமாமுனிவர், தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்து, "சதுர் அகராதி" என அகராதி நூல் தந்து தமிழில் அகராதிக் கலைக்கு முதன் முதலில் வித்திட்டார்."தமிழ் மாணவன்" எனத் தம் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்ற அறிஞர் ஜி.யு. போப், "திருக்குறள்" நூல் முழுவதையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தும், புறநானூறு, திருவாசகம் போன்ற இலக்கியங்களை மொழி பெயர்த்தும் தமிழ் மொழியின் பெருமையை மேலைநாடுகளில் முதன் முதலில் பறைசாற்றினார்.

வளம் பெருகிட வாழ்த்து
பொறியியல் மேதை பென்னி குய்க், ஆங்கிலேய அரசு நிதி தர மறுத்த நிலையிலும் இங்கிலாந்து நாட்டில் தமக்கும் தம் மனைவிக்கும் உடைமையாக இருந்த சொத்துகளை விற்றுப் பணம் கொண்டுவந்து பெரியாறு அணையைக் கட்டி முடித்து, தென்மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்தார். இத்தகைய கிறிஸ்துவப் பெருமக்களின் தொண்டுகளைப் போற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த காலங்களிலெல்லாம் அப்பெருமக்களுக்குச் சிலைகள் எடுத்துச் சிறப்பித்ததுடன், கிறிஸ்துவ மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல சலுகைகளை வழங்கிய நிகழ்வுகளையெல்லாம் நான் நினைவுகூர்ந்து, கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications