கிரானைட் முறைகேடு: சகாயத்திடம் சிக்கிய கனிமவளம், தொல்லியல், பொதுப்பணித்துறை அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் வளத்தை தனிப்பட்ட நபர்கள் சுரண்டுவதற்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, கனிமவளத்துறை ஆகிய அனைத்து துறை அதிகாரிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறை​கேடுகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிசகாயம் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதிவரை 5 கட்ட விசாரணையை முடித்தார். இந்த 5 கட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பல உண்மைகள் தெரியவந்தன.

கிரானைட் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட வெட்டி எடுத்துள்ளனர் என்ற புகார்கள் ஒருபுறம் இருக்க, சட்டத்திற்கு புறம்பான வகையில் அரசு நிலங்களிலும், தனியார் விவசாய நிலங்களை மிரட்டி வாங்கியும், கற்களை வெட்டியுள்ளனர்.

நீர்வரத்து கால்வாய்களை அடைத்து தண்ணீர் வர முடியாமல் செய்து விளைநிலங்களை பாலைவனமாக்கி வைத்துள்ளனர் கிரானைட் முதலைகள். வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார் சகாயம். இந்த 6 கட்ட விசாரணைகளில் இதுவரை நேரடியாகவும் தபால் மூலமாகவும் 430 புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள், மூன்றாக வகைப்படுத்தப்பட்டு, புகார்களின் தன்மையைப் பொறுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மிக முக்கியமான புகார்களை சகாயம் நேரடியாக விசாரிக்கிறார். மற்ற புகார்களை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர், டாமின் அதிகாரிகள், தாசில்தார், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் என சம்பந்தப்பட்டவர்களுக்கு கேள்விகளைக் கேட்டு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார் சகாயம். அவரது கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் திணறிவருகிறார்களாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்.

அரசு நிலங்கள்

அரசு நிலங்கள்

நிலச்சீர்திருத்த உதவி ஆணையாளரை வரவைத்து, மேலூர் பகுதிகளில் இதுவரை எவ்வளவு அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய சகாயம், சர்வே எண் உள்பட எல்லா விவரங்களையும் தரவேண்டும் என்று கேட்டார்.

வருவாய்துறை வசம்

வருவாய்துறை வசம்

அந்த விவரங்கள் அனைத்தும் வருவாய்த் துறையிடம்தான் உள்ளது என்று கூறி உதவி ஆணையர் எஸ்கேப் ஆகிவிட்டார். மறுநாள், மேலூர் பகுதிகளில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள் என்று பல அதிகாரிகளை வரவைத்து விசாரணை நடத்தினார் சகாயம்.

பதில் சொல்லாத அதிகாரிகள்

பதில் சொல்லாத அதிகாரிகள்

எத்தனை கிரானைட் குவாரிகள் உள்ளன, அரசு புறம்போக்கு இடங்களில் எத்தனை குவாரிகள் உள்ளன, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று சகாயம் கேட்ட கேள்விகள் எதற்கும் உருப்படியான பதில் சொல்லவில்லையாம் அதிகாரிகள். எனவே அந்த விவரங்களை ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக அனுப்புமாறு அவர்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார் சகாயம்.

பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறை

''பெரியார் கால்வாய்களின் முழு விவரம் தேவை. அவற்றின் குறுக்கே தண்ணீர் போகவிடாமல் கற்கள் போடப்பட்டுள்ள இடத்தின் நீளம், அகலம் என்ன, ஆக்கிரமிப்பு செய்ததால் எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன?

விவசாய அழிப்பு நடந்த இடங்கள் எவை, இதுவரையில் விவசாயிகள் அளித்துள்ள புகார்களும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் என்ன?' இப்படி 40க்கும் மேற்பட்ட கேள்விகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார் சகாயம்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் அவதியில் அலைகிறார்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள்.

தொல்லியல் துறை!

தொல்லியல் துறை!

மதுரையில் இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்த புராதனச் சின்னங்களையும், மலைகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர் கிரானைட் புள்ளிகள்.

இதில் பாதிக்கப்பட்ட பழைமையான இடங்களையும், அதற்கு மாநில தொல்லியல் துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்ட விவரங்களையும் கேட்டிருக்கிறார் சகாயம்.

நடவடிக்கை என்ன?

நடவடிக்கை என்ன?

கோயில் குளங்களை உடைக்கும்போது காவல் துறைக்குக் கொடுக்கபட்ட புகார்கள், துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என 30க்கும் மேற்பட்ட கேள்விகளை தொல்லியல் துறைக்கு சகாயம் அனுப்பியுள்ளார். அந்தக் கேள்விகளுக்கு எப்படி பதில் அனுப்புவது என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள்.

கனிமவளத்துறை அதிகாரி

கனிமவளத்துறை அதிகாரி

கனிமவள உதவி இயக்குநர் ஆறுமுக நயினாருக்கு மிகவும் சிக்கலான 36 கேள்விகளுக்கான பதில்களை ஜனவரி 27-ம் தேதி அறிக்கையாகத் தருமாறு கூறியிருந்தார் சகாயம் ஆனால் இதுவரை அவர் பதில் தரவில்லை. அவரை நேரில் அழைத்த சகாயம், 'இன்னும் ஒரு வார காலத்துக்குள் அறிக்கை வரவில்லை என்றால் உங்கள் மீது கமிஷனில் புகார் கொடுக்கப்படும்' என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.

குடையும் கேள்விகள்

குடையும் கேள்விகள்

'மதுரை மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? அவற்றில், டாமின் வழங்கிய அனுமதி எத்தனை, தனியார் நிறுவனத்துக்கு எத்தனை?

கிரானைட் குவாரிகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட, அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் தேவை.

2002-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கொடுத்த அனுமதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

2002-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கொடுத்த அனுமதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

1994-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை புவியியல் மற்றும் சுரங்கத் துறை, கனிமவளத் துறை ஆகியவை கொடுத்த லைசென்ஸ் குறித்த விவரங்கள் என்ன?

குவாரிகள் பெர்மிட், அனுமதிக்கப்பட்ட லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அவற்றின் பதிவு எண்கள், மதுரை மாவட்டத்தில் இயங்கும் பாலிஷ் ஃபேக்டரிகள் மற்றும் அவற்றுக்கான அனுமதி பற்றிய விவரங்கள் என்ன?

பி.ஆர்.பி நிறுவனம் நடத்தும் கிரானைட் பாலிஷ் ஃபேக்டரிகளின் எண்ணிக்கை மற்றும் அவை குறித்த பிற விவரங்கள், இதுவரை எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன?

 அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள கற்கள் குறித்த விவரங்கள் என்ன?

அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள கற்கள் குறித்த விவரங்கள் என்ன?

இதுவரை மாவட்ட ஆட்சியர் சார்பாகவும், கனிமவளத் துறை இயக்குநர் சார்பாகவும் கிரானைட் குவாரிகள் மற்றும் பாலிஷ் தொழிற்சாலைகளில் என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விரிவான அறிக்கையாக அளிக்க வேண்டும்' என்று கனிமவளத்துறையிடம் குடைந்து குடைந்து கேட்டுள்ளார் சகாயம்.

காவல் துறை!

காவல் துறை!

மதுரை மாவட்ட மாநகர கமிஷனருக்கும், எஸ்.பிக்கும் ஏகப்பட்ட கேள்விகளை அனுப்பியிருக்கிறார். 1990 முதல் 2014 வரை கிரானைட் சம்பந்தமாக எத்தனை புகார்கள் வந்தன?

அதில், ''தனிநபர் மீது வந்த புகார்கள், கிரானைட் முதலாளிகளின் மீது வந்த புகார்கள், எத்தனை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள், சார்ஜ் ஷீட் போடப்பட்ட வழக்குகளின் விவரங்கள் தேவை.

புகார் கொடுக்கப்பட்டவர்களின் மீது நடந்த தாக்குதல்கள் விவரங்கள் வேண்டும்' என கேள்விகள் குடையவே நிம்மதியைத் தொலைத்துவிட்டு திரிகின்றனர் மதுரை மாவட்ட காவல் துறை அதிகாரிகள். பழைய கோப்புகளைத் தேடி எடுத்து தூசித் தட்டிக்கொண்டிருக்கிறது மாவட்ட காவல் துறை நிர்வாகம்.

ஆட்சியருக்கும் சம்மன்

ஆட்சியருக்கும் சம்மன்

மதுரையில் யாரெல்லாம் ஆட்சியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியல் சகாயம் கையில் இருக்கிறது. விரைவில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பலப்படுத்திய தினபூமி

அம்பலப்படுத்திய தினபூமி

கடந்த 20.7.2010 ஆம் தேதியன்று விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தல், ரூ.1,500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்டக் கலெக்டர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதிரடி கைது

அதிரடி கைது

இந்த செய்தியினால் அப்போதைய தி.மு.க. அரசு தினபூமி ஆசிரியர் மற்றும் அவரது மகனையும் 21.7.2010 ஆம் தேதி காலை 1.20 மணிக்கு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கைது செய்து சிறையில் அடைத்தது. பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அவசர அவசரமாக அடுத்த நாளே தி.மு.க. அரசு சிறையில் இருந்து வெளியே அனுப்பியது. ஆனாலும் தினபூமி ஆசிரியர் மற்றும் அவரது மகன் மீது மேலும் 5 பொய் வழக்குகளை பதிவு செய்யப்பட்டது.

சேட்டிலைட் படம்

சேட்டிலைட் படம்

2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டத்தில் கிரானைட் சுரங்க பகுதிகளில் தினபூமியால் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்கள்தான் மிகப்பெரிய கிரானைட் சுரங்க ஊழலை அம்பலப்படுத்த உதவியது. கீழையூர் கீழவளவு, மலம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள கண்மாய்கள், புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோத கிரானைட் தோண்டப்பட்டு இருந்ததையும், ஸ்டாக் யார்டுகளில் மிக பெரிய அளவில் கிரானைட் கற்களை பதுக்கி வைத்திருப்பதையும் கண்டுபிடித்து அதுபற்றி புகார் அளிக்கவும் உதவியது.

 தினபூமி ஆசிரியரிடம் விசாரணை

தினபூமி ஆசிரியரிடம் விசாரணை

இதனடிப்படையில் சகாயம், தினபூமி நாளிதழ் ஆசிரியரும் அதன் உரிமையாளருமான மணிமாறன் மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள், கிரானைட் முறைகேடுகள் குறித்து எங்கள் பத்திரிகையில் செய்திகள் வெளியிட்டதால், பொய் வழக்குகள் பதிவுசெய்து எங்களை காவல் துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர். அந்தப் பொய் புகாரில் இருந்து மீண்டுவர நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்' என்று விரிவாகப் புகார் அளித்தனர்.

பி.ஆர்.பி நிறுவன முறைகேடு

பி.ஆர்.பி நிறுவன முறைகேடு

பி.ஆர்.பி நிறுவனம் நடத்தி வந்த கிரானைட் தொழிற்சாலை பற்றிய மிக முக்கியமான விவரங்களையும் மாவட்ட ஆட்சியரில் இருந்து காவல் துறையினர் வரை யார் யார் கிரானைட் ஊழலுக்கு உதவினர் என்ற விவரங்களையும் சகாயம் கமிஷனிடம் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்துவிட்டுச் சென்றனர்.

நரபலி விசாரணை

நரபலி விசாரணை

கடந்த முறை ஆய்வின் போது கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார்கள் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. இந்த விசாரணைக்குப் பின்னர் நரபலி பற்றி தோண்ட ஆரம்பிப்பார் சகாயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக முறைகேடாக கிரானைட் வெட்டிய முதலைகள் இப்போது முழிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு உதவிய அதிகாரிகளும் சகாயத்தின் கேள்வியால் திக்குமுக்காடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+