உடையும் நிலையில் குண்டாறு நீர்தேக்கம்..!
செங்கோட்ட: நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான குண்டாறு நீர்த்தேக்கம் உடையும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டம் என்றாலே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு நீர்த்தேக்கம், கரையாறு, முண்டந்துறை, களக்காடு, கிருஷ்ணாபுரம், நெல்லையப்பர் கோவில், கூந்தன்குளம், குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி என ஏராளமான சுற்றுலா பகுதிகள் நினைவுக்கு வரும்.

இதில் ஓன்று செங்கோட்டை அருகேயுள்ள கண்ணுபுளிமெட்டு குண்டாறு நீர்த்தேக்கம். இயற்கை எழில் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இதமான சாரலுடன், குளிர்ந்த தென்றல் காற்றும் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டாறு பகுதிக்கு வந்து செல்வர்.
குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். குற்றாலம் சீசன் துவங்கி விட்டால் அடுத்து தமிழக கேரள மாநிலங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
நெல்லை மாவட்ட நீர்த் தேக்கங்களில் மிகவும் சிறிய நீர்த்தேக்கமான இந்த நீர்தேக்கத்தை நம்பி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி வருகிறது.
கடந்த 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் 36.6அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்கம் மணல், சகதிகளால் சுமார் 10 அடிக்கு மண் மேடு ஏற்பட்டு நீரின் அளவை குறைத்த நிலையில் தற்போது அணையின் மறுகால் விழும் பகுதியும் சேதமடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
மறுகால் பகுதியில் பல்வேறு இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருமளவில் தண்ணீர் வீணாகி உடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்புத்தன்மையும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள், விவசாயிகள் நலன் கருதி அணைக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications