தமிழகத்தில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல், டெங்கு: 38 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி வரைக்கும் 8 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 118 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல டெங்கு காய்சலும் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருவதால் இதுவரை நூற்றுக்கணக்கோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் டெங்குவிற்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த ஜனவரியிலிருந்து 2038 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 191 பேர் காய்ச்சலின் தீவிரத்தால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 118 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இந்த நோய் பரவியுள்ளது.

118 பேருக்கு அறிகுறி
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி கடந்த 1 மாதத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களில் 118 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 60 பேர் குணமடைந்து விட்டனர். 48 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 பேர் பலி
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மண்ணடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பலியானார். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 2 பேர் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அறிய முடிகிறது.

சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது, தட்ப வெப்பநிலை மாற்றம், குளிர் காரணமாக, மாநிலம் முழுவதும், 'ஸ்வைன் ப்ளூ' (பன்றிக்காய்ச்சல்) பாதிப்பு பரவலாக உள்ளது. 2009ல், வெளிநாட்டு பறவைகள் மூலம் பரவிய பன்றிக்காய்ச்ச லால், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தற்போது அதன் வீரியம் குறைந்துவிட்டதால், 'தடுமன் காய்ச்சல்' எனப்படுகிறது. சளித்தொல்லையுடன் கூடிய காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும்; பயப்பட தேவையில்லை. மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனை முக்கியம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு முகாம்
பன்றி காய்ச்சலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விமான,ரயில் நிலையங்களில்
சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை விமானநிலையம், சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்திவருகின்றனர்.

நோய் அறிகுறி
விமானம், ரயில் ஏறுவதற்கு வரும் பயணிகள் மற்றும் இறங்கி செல்லும் பயணிகளிடம் இருமல், சளி, தொண்டை வலி எதுவும் இருந்தால் உடனே பரிசோதனை செய்யுங்கள் என்று கூறியும், மேலும் பன்றி காய்ச்சல் நோய் குறித்த துண்டு பிரசுரமும் பயணிகளுக்கு வழங்கினார்கள். பயணிகளுக்கு பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி எதுவும் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி
விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களில் யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் உடனே அவர்களை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதாரண காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

பீதியடைய வேண்டாம்
ஆரம்ப அறிகுறிகளான தொடர் காய்ச்சல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், இருமல், தொண்டை வலி மற்றும் எரிச்சலுக்கு தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரை வாங்காமல், உரிய மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். பன்றி காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக எல்லா நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பது எப்படி?
இருமல், தும்மலின் போது கைக்குட்டை, திசுப்பேப்பர் மூலம் வாய் மற்றும் முகத்தை மூட வேண்டும். மூக்கு, கண்கள், வாய் போன்ற உறுப்புகளை தொடுவதற்கு முன்பும் தொட்ட பிறகும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வெந்நீரில் உப்பு
பஸ், ரயில், மார்க்கெட், மருத்துவமனை, சினிமா தியேட்டர்கள் போன்ற கூட்டமான இடங்களில் முடிந்தவரை முக கவசம் அணியலாம். மிதமான வெந்நீருடன் உப்பு கரைசல் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். முகத்தை தூய்மையான நீரில் அடிக்கடி சுத்தம் செய்யலாம். வெது வெதுப்பான குடிநீரை அடிக்கடி பருகலாம்.
‘பிரிட்ஜ்' (குளிர்பதன பெட்டி) வாரம் ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

தள்ளி நில்லுங்கள்
காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி உள்ளவர்களிடம் ஒரு மீட்டர் தூரத்திற்குள் நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

கைகோர்த்த டெங்கு
பன்றிக்காய்ச்சல் பலிகள் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க டெங்கு காய்ச்சல் பலிகளும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. டெங்கு சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை தாக்கும். இதுவும் முற்றிய நிலையில் உயிரை பறிக்கும்.

நிரம்பி வழியும் நோயாளிகள்
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிக பாதிப்பு ஏற்பபட்டுள்ளது. இது வரை இங்கு 10 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜபாளையம் நகராட்சி பகுதியில் குழந்தைகள் உள்பட 19 பேர் இறந்துள்ளனர்.

அலட்சிய அதிகாரிகள்
டிசம்பர் மாதம் முதல் பலி ஒரு மாணவி. இதனை தொடர்ந்து, 10 குழந்தைகள் இறந்த பின்னரே டெங்கு பரிசோதிக்கும் எலைசா மிஷன் கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்டது.

மொத்த பலி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கி 30 பேரும் பன்றிக்காய்ச்சல் தாக்கி 8 பேர் மொத்தம் 38 பேர் இறந்துள்ளதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 70க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என உறுதி செய்ய முடியாத ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications