சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு : மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று கேட்டுள்ள நீதிமன்றம், சட்டத்தின் அதிகாரத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர் சித்திக் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் மெட்ரோ ரயில் திட்டப்பணியினால் சேதம் அடைந்துள்ளதாகவும், அதை சரி செய்வதற்காக, கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ரத்து செய்யவேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, விதிமுறைகளை மீறி போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். எனவே, அந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஆரோக்கியதாஸ் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கறிஞர்: மெட்ரோ ரயில் பணியினால் சட்டக்கல்லூரி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால், கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிபதிகள்: கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கட்டிடம் கல்லூரியாக பயன்படுத்த தகுதியில்லை என்றும் எந்நேரமும் அது இடிந்து விழலாம் என்று 2 நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த கட்டிடத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஒருவேளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், அதற்கு யார் பொறுப்பாவார்கள்? அப்படி நடந்தால், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடருவார்கள்.
வழக்கறிஞர்: கல்லூரி இடம் மாற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வக்கீல் ராகவாச்சாரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்குடன் இந்த வழக்கை விசாரிக்கலாம்.
நீதிபதிகள்: இந்த விஷயத்தில் பொது விசாரணைக்கு எல்லாம் உத்தரவிட முடியாது. 500 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது கோரிக்கைகளையும் பரிசீலிக்க முடியாது. சட்டத்தின் அதிகாரத்தை யாரும் கையில் எடுத்து கொள்ளக்கூடாது.
வழக்கறிஞர்: இந்த கட்டிடத்தில் உள்ள விரிசல்கள் சரி செய்த பின்னர் மீண்டும் கல்லூரி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தால், எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. மேலும், அம்பேத்கர் சட்டக்கல்லூரி புராதான கட்டிடம். இந்த கட்டிடம் தவிர 10 வகுப்பு அறைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டிடத்தில் கல்லூரியை இயக்க அனுமதித்து, புராதான கட்டிடத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடியும்.
தலைமை நீதிபதி: இது போன்ற உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என்று எங்களால் உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் சட்டக்கல்லூரி இயங்குவது சென்னையை தவிர உலகில் வேறு ஒரு இடத்திலும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. கட்டிடம் சரியில்லை என்றால், இடத்தை மாற்றத்தான் செய்வார்கள்.
வழக்கறிஞர்: ஏராளமான தனியார் சட்டக்கல்லூரிகள் சென்னைக்கு இடம் மாற்றம் செய்ய உள்ளனர். அதனால், இந்த அரசு கல்லூரியை நீண்ட தூரத்துக்கு இடம் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிபதிகள்: தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்க தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளதே?
வழக்கறிஞர்: ஏற்கனவே தனியார் சட்டக்கல்லூரி தமிழகத்தில் உள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மட்டும்தான், இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரே ஒரு சட்டக்கல்லூரி ஆகும். இங்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் படிக்கும் போது, மூத்த வக்கீல்களிடம் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளது. இடம் மாற்றம் செய்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
நீதிபதிகள்: கல்வியின் தரம் என்பது ஒன்றுதான். இடத்தை விட்டு இடம் மாறுவதில், கல்வியின் தரம் எப்படி குறையும்? படிப்பின் மீது படிக்கலாம்.
வழக்கறிஞர்: சட்டக்கல்லூரியில் 2008ம் ஆண்டு மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்த கல்லூரியை அரசு இடம் மாற்றம் செய்கிறது. எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். 2009ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் கலவரம் நடந்தது. அதற்காக இந்த உயர்நீதிமன்றத்தை அரசு இடம் மாற்றம் செய்ய அரசு முடிவு எடுக்குமா? இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
நிதிபதிகள் உத்தரவு
இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில், வேறு ஒரு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும்போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், யார் பொறுப்பு ஏற்க முடியும்? கல்லூரி இடம் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சட்டக்கல்லூரி இடமாற்றம் தற்காலிகமானதா இல்லை நிரந்தரமானதா என்பது குறித்து இப்போது நீதிமன்றம் கருத்து கூறமுடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications