ஆதிசேஷனை பிஏவாக நியமிக்க கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு: சட்டசபை செயலாளருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆதிசேஷன் என்பவரை தனது பி.ஏ.வாக மீண்டும் நியமனம் செய்யக்கோரி எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சருக்கு நிகரான சலுகைகள் உண்டு. அரசு தரப்பில் ஒரு நேர்முக உதவியாளர், உதவியாளர், கார், டிரைவர் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஸ்டாலினுக்கு நேர்முக உதவியாளராக சட்டசபை செயலகத்தில் துணைச் செயலாளராக பணிபுரிந்த ஆதிசேஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்ற மு.க.ஸ்டாலினை போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் அருகே போட்டி சட்டசபை கூட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலினுடன் நேர்முக உதவியாளர் ஆதிசேஷன் நின்று கொண்டிருந்ததாக உளவுப்பிரிவு போலீசார் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் பதவியில் இருந்து ஆதிசேஷன் விடுவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னுடைய சிறப்பு தனி உதவியாளராக பணியாற்றிய ஆதிசேஷன் என்பவரை அப்பதவியில் இருந்து விடுவித்தது மட்டுமல்லாமல், அவரை பதவி இறக்கமும் செய்து தமிழக சட்டசபை செயலாளர் கடந்த ஆகஸ்டு 22ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஆதிசேஷனை மீண்டும் எனக்கு தனி உதவியாளராக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி ஆஜராகி, 'இவர்தான் எனக்கு உதவியாளராக வேண்டும் என்று வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கிற்கு விரிவான பதிலை சட்டசபை செயலாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications