9 நீதிபதிகள் பட்டியலை வாபஸ் பெற வேண்டும்!- தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள் மனு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்பக் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை ஒரே தடவையாக நிரப்ப வேண்டும். ஏற்கனவே நியமிக்கப்பட்ட சமூகத்தினருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையிலான குழுவினர், டெல்லியில் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இச்சந்திப்புகளின்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் எஸ்.அறிவழகன், பொருளாளர் எஸ்.காமராஜ், மூத்த வழக்குரைஞர் கே.கோபால், பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் என்.எஸ்.ரேவதி மற்றும் வி.நன்மாறன், காண்டீபன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 18 நீதிபதிகளுக்கான பணியிடங்களுக்கு நியமிக்க 9 பேர் கொண்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். அப்பட்டியலில் மற்ற சமூகத்தினரின் பிரதிநிதித்துவமோ பெண் வழக்கறிஞர்களோ இடம் பெறவில்லை.
எனவே, ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட 9 பேர் கொண்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பும்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மத்திய சட்ட அமைச்சரவையும் கேட்டுக் கொண்டோம்.
எங்கள் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கெüடா, "நீதிபதிகள் நியமனம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தும். நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலில் உள்ளவர்களின் பின்னணி குறித்து உளவுத் துறை அளிக்கும் விசாரணை அறிக்கைக்குப் பிறகே அவர்களின் பெயர்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் 125-ஆவது ஆண்டு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். இதற்கான விழாவில் பங்கேற்கும்படி சதானந்த கௌடாவைக் கேட்டுக் கொண்டோம். பிரதமரை அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கச் செய்யவும் முயற்சித்து வருகிறோம்," என்றார்.












Click it and Unblock the Notifications