மாணவிகளிடம் தவறாக நடந்த தலைமையாசிரியர் - பெற்றோர் போராட்டம்... கைது!
பழனி: பழனி அருகே மாணவிகளிடம் தவறாக நடந்த தலைமை ஆசிரியர், பெற்றோரின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பழனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளிடம் அடிக்கடி தவறாக நடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 7 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் ஊர் மக்களுக்கும் தெரிய வரவே நேற்று அவர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து விடுப்பு எடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் வெள்ளைச்சாமியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications