தென்காசி அசந்துடுச்சு.. "ஜெய்னி, போகாதே நில்லு".. கடையநல்லூர் பள்ளிவாசல் கிட்ட பதறிய மக்கள்.. ஏன்?
தென்காசி: தென்காசி பள்ளிவாசல் முன்பு திரண்ட பொதுமக்கள் கதறி அழுதுள்ளார்கள்.. என்ன காரணம்? அப்படி என்ன நடந்தது கடையநல்லூரில்?
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது. பிற தர்காக்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவென்றால், இந்த தர்காவிற்கு அருகில் யா முஹம்மத் சமாதி வைக்கப்பட்டிருக்கும்.

ஊர்வலம்: அதுமட்டுமல்ல, இங்கு தர்காவுக்கு சொந்தமாக யானையும் உண்டு. புகழ்பெற்ற கந்தூரி விழாக்களின்போது, இந்த தர்காவில் இருக்கும் யானைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, யானை மேல் கொடி ஏற்றி ஊர்வலமாக வரும்.. அதன்பிறகு சந்தனக்கூடு ஊர்வலமும் நடைபெறும்.
இந்த பள்ளிவாசலுக்கு அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்வது வழக்கம்... பத்திகளை அங்கு வைக்கப்பட்டிருக்கும் விளக்கில் ஏற்றி வைத்து தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.. அந்தவகையில், கடையநல்லூரில் இருக்கும் பெரிய பள்ளி வாசல் மத ஒற்றுமைக்கான அடையாளமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திடீர் சோகம்: இந்நிலையில், திடீரென சோகத்தில் மூழ்கியுள்ளது இந்த பள்ளிவாசல்.. காரணம், இந்த பள்ளிவாசலில் கடந்த 22 ஆண்டுகளாக ஒரு பெண் யானை இருந்தது.. அந்த யானையின் பெயர் "ஜெய்னி".. 58 வயதாகிறது.
பள்ளிவாசலின் பராமரிப்பிலேயே இந்த யானை இத்தனை வருடங்களும் வளர்ந்து வந்தது.. சில வருடங்களுக்கு முன்பு, இந்த யானைக்கு முறையான ஆவணங்களை காண்பிக்குமாறு வனத்துறையினர் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கேட்டிருந்தனர்.. அப்போது ஆவணங்களை நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆவணங்கள் : முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், இந்த யானையை வனத்துறையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.. 22 வருடங்களாக, மக்களோடு மக்களாக பழகி வந்த ஜெய்னி யானையை, திடீரென வனத்துறையினர் மீட்க வந்ததால், கடையநல்லூர் மக்கள் அதிர்ந்து போனார்கள்.. யானையைவிட்டு அவர்களால் பிரியவே முடியவில்லை..
அந்த யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்து, மாறி மாறி முத்தமிட்டனர்.. சிலர் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு கதறியழுதனர்.. இறுதியில், கண்ணீருடன் யானைக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
சோகம்: யானையை கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் இணையத்தில் வீடியோவாகவும் வெளியாகி வருகிறது.. பொதுமக்கள் திரண்டு ஒன்றுகூடி, பிரியாவிடை கொடுத்தாலும், ஜெய்னியின் நினைவுகளிலிருந்து இன்னும் மீளவில்லை கடையநல்லூர்...!!












Click it and Unblock the Notifications