தொடர் மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு... வால்பாறையில் 3 வீடுகள் இடிந்து சேதம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால், விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை. மேலும் சென்னைக்கு வரும் விமானங்களும் தரையிரங்க முடியவில்லை. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதல் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில், மேகமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் வால்பாறையில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறையில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. 160 அடி கொள்ளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 81.10 அடியாக உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆந்திர கடல் பகுதியையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடலில், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
