முரட்டு வெயில்.. திடீர்னு "பாலை" வார்த்த ஊட்டி.. பக்கத்திலேயே கோவை.. துள்ளி குதித்த மக்கள்.. ஆஹாஹா
ஊட்டி: கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.. இந்த திடீர் மழையால், சுற்றுலா பயணிகள் குதூகலமாகி உள்ளனர்..
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது.
கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, கடந்த 2014ம் ஆண்டு 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

ஊட்டியில் மழை: இந்த வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளும், மலைவாசஸ்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தபடியே உள்ளது..
அதேசமயம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே, காலையில் வெயிலும், பிற்பகலுக்கு பிறகு மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும் நிலவி வந்தது. சில சமயம், மிதமான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.. குளிர்ந்த காற்று வீசியபடியே இருந்தநிலையில், பிற்பகலுக்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.. ஊட்டி முழுக்க மழை பெய்ததால், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.. சேரிங்கிராஸ், கமா்ஷியல் ரோடு, பஸ் ஸ்டாண்டு, காந்தல், ஃபிங்கா் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

பலத்த மழை: இந்த மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... வாகன ஓட்டிகள் இதனால் பெரிதும் அவதிக்குள்ளானாலும், சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையையும், திடீரென பெய்த மழையையும் வெகுவாக அனுபவித்தனா். பல சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே, சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதில் ஆர்வம்கொண்டனர்.
கோவை மாவட்டத்திலும் நேற்று மாலை, நல்ல மழை பெய்தது.. காந்திபுரம், ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது..
வாகன ஓட்டிகள்: இதனால், அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருவதால் நீலகிரி, கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications