சிறப்பு பேருந்துகள் இயக்கம்... சென்னை - பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு ஆயிரக்கணக்கில் பேருந்துகள் செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தீபாவளியை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பேருந்து, ரயில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஏராளமானோர் சென்னையில் இருந்து, தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சென்னையில் பெரியார் சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, நூறடி சாலை, பாரிமுனை சாலைகளிலும் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன. தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு ஆயிரக்கணக்கில் பேருந்துகள் செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், சென்னையில் இருந்து வெளியேறும் பெரும்பாலான பேருந்து சேவை, பெருங்களத்தூர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அங்கு இன்று மாலை தொடங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். சென்னையில் இருந்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர். கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
