இலங்கை மீது மத்திய அரசு இனியும் கருணை காட்டினால் வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

History won't forgive centre if it shows mercy on Sri Lanka
சென்னை: இனப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது இந்திய அரசு இனியும் கருணை காட்டினால் அதை வரலாறும் மன்னிக்காது; தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான புதிய வீடியோ ஆதாரத்தை லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 6.11 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோ ஆதாரம் காண்பவர் இதயங்களை நொறுக்கும் வகையில் கொடூரமாகவுள்ளது.

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு சித்திரவதை உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களின் உடல்களை சுற்றி சிங்களப் படையினர் நிற்கும் காட்சியுடன் புதிய வீடியோ ஆதாரம் தொடங்குகிறது.

தமிழ் பெண்களும், பெண் விடுதலைப் புலிகளும் சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டதை கொண்டாடி மகிழும் சிங்களப்படையினர், ஆடையில்லாமல் கிடக்கும் அவர்களின் உடல்களை செல்பேசி மூலம் படம்பிடிக்கின்றனர். அது மட்டுமின்றி, பெண்களின் ஆடையற்ற உடல்கள் மீது துப்பாக்கி முனையால் குத்தும் ராணுவத்தினர், அருவருக்கத்தக்க சில வார்த்தைகளை உதிர்க்கும் காட்சிகளும் சேனல்-4 வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில் இடம் பெற்றுள்ளன.

புதிய ஆதாரத்தை ஆய்வு செய்த புகழ்பெற்ற தடயவியல் வல்லுனர் டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பர்ட், இந்த வீடியோ உண்மையானது தான் என்று சான்றளித்துள்ளார். மேலும், தமிழ் பெண்கள் அனைவரும் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் பெண்களின் உடல்களில் காணப்படும் காயங்களைப் பார்த்தால் அவை போர்க்களத்தில் ஏற்பட்டதைப் போன்று தோன்றவில்லை; அவர்களை சிங்களப்படையினர் பிடித்து தனி இடத்தில் வைத்து சித்ரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்களைப் போல தோன்றுகிறது; இந்த சித்திரவதையால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களையும் இலங்கை ராணுவத்தினர் வெறித்தனமாக சிதைத்திருக்கிறார்கள் என்றும் ரிச்சர்ட் ஷெப்பர்ட் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைப் போர் முடிவடைந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விளக்கும் வகையில் எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகள் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்குப் பின் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவது, சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படுவது என சிங்களப்படையினர் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையிலான ஏராளமான வீடியோ ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியிருக்கின்றன.

இதுவரை வெளியான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் விட இப்போது வெளியாகியுள்ள ஆதாரம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழினத்தை அடியோடு கருவறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்களப்படையினர் நிகழ்த்திய திட்டமிடப்பட்ட குற்றங்கள் அடங்கிய இந்த வீடியோ ஆதாரம் அவர்களின் போர்க் குற்றங்களுக்கு மட்டுமின்றி, இனப்படுகொலைக்கும் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

அதே நேரத்தில், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என உலகின் பல நாடுகள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவற்றுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல இந்தியா கண்களை மூடிக் கொண்டிருப்பது தான் கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை மீது இந்திய அரசு இனியும் கருணை காட்டினால் அதை வரலாறும் மன்னிக்காது; தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப் படவுள்ள நிலையில், இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+