ஓசூர் பத்தலப்பள்ளி டிராபிக்கிற்கு எண்டு கார்டு! 37.90 கோடியில் மேம்பாலம்.. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி
கிருஷ்ணகிரி: ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் புதிதாக அமைய உள்ள புறநகர் பேருந்து நிலையத்தால் ஏற்படப்போகும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, 37.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவுள்ள இந்தப் பாலத்திற்காகத் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கட்டுமான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிவடையும் பட்சத்தில், ஓசூர் - பெங்களூரு சாலையில் வாகன ஓட்டிகள் தடையின்றிப் பயணிக்க வழிவகை ஏற்படும்.
தொழில் நகரமான ஓசூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன நெரிசலால் வாகன ஓட்டிகள் படும் அவதிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கப் போகிறது. குறிப்பாக, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்தலப்பள்ளி பகுதியில் ஏற்பட்டு வந்த முட்டுக்கட்டையை உடைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை இப்போது அதிரடியாகப் களமிறங்கியுள்ளது.

ஓசூர் பாலம் ஏன்
ஏன் இந்தப் பாலம் தெரியுமா? ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது நகரின் மையப்பகுதியில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவே இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தற்போது 80 சதவீதத்தை நெருங்கிவிட்டன.
இன்னும் சில மாதங்களில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பஸ்கள் ஒரே நேரத்தில் மெயின் ரோட்டிற்கு வந்து செல்லத் தொடங்கினால், ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம் இருந்தது.
இதை முன்கூட்டியே கவனித்த அதிகாரிகள், பத்தலப்பள்ளி சந்திப்பில் ஒரு மேம்பாலம் இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முடிவு செய்தனர்.தொடங்கியது கட்டுமானப் பணி:இதற்காக 37.90 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு, மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளித்தது.
37.90 கோடி ரூபாய் நிதியில் பாலம்
கடந்த வருடமே இதற்கான டெண்டர் விடப்பட்டாலும், நில அளவீடு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் ஒரு வருடம் இந்தப் பணிகள் முடங்கிக் கிடந்தன. இப்போது எல்லா சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு, பாலம் கட்டும் வேலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த உயர்மட்டப் பாலம் அமைய உள்ளது.
பாலம் கட்டும் இடத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மண் பரிசோதனைகள் முடிந்த நிலையில், தற்போது மெயின் ரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வேலைகள் நடக்கின்றன. இதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் தற்காலிகமாகப் பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
1 கி.மீ தூரத்திற்குச் சர்வீஸ் சாலையில் வாகனங்கள்
1 கி.மீ தூரத்திற்குச் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் வேகம் குறைந்து சற்று நெரிசல் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தப் போக்குவரத்து போலீசாரும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படக் குறைந்தது ஒன்றரை வருடம் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதுவரை வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் ஒரு மணி நேரம் டிராபிக்கில் சிக்க வேண்டியிருக்கிறது. புது பஸ் ஸ்டாண்ட் வந்தாலும் இதே நிலைமை வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆனால், இந்தப் பாலம் வேலைகள் தொடங்கிவிட்டது பெரிய நிம்மதி என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
வாகன ஓட்டிகள் ஹேப்பி
இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, வெளியூர் வாகனங்கள் நேரடியாக மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் மேலே பறக்கும், பஸ்கள் மட்டும் கீழே செல்லும். இதனால் பெங்களூரு சாலையில் தினமும் சிக்கிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளுக்குப் பெரிய அளவில் நேரம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் ஓசூரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டம், நிறைவேறினால், ஓசூரின் முக்கிய டிராபிக் பிரச்சனை ஓரளவு குறையும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்












Click it and Unblock the Notifications