மதுரைக்கு வரும் கருணாநிதியை ஏன் சந்திக்கப் போவதில்லை?: அழகிரியின் 'நக்கல்' விளக்கம்
மதுரை: வரும் 13ம் தேதி பிரச்சாரம் செய்ய மதுரைக்கு வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப் போவது இல்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த அக்கட்சி தலைவர் கருணாநிதியின் மகனான அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களிடம் வரும் தேர்தலில் திமுகவில் பணம் கொடுத்து சீட் வாங்கி போட்டியிடுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் வரும் 13ம் தேதி கருணாநிதி மதுரையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பிரச்சாராம் செய்கிறார். மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

அழகிரி
கருணாநிதி மதுரைக்கு வரும் அதே நாளில் அழகிரி நெல்லையில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொண்டர்கள்
திமுகவில் தற்போது தொண்டர்களுக்கு மரியாதையே இல்லை. கட்சியின் பெயரைக் கூட தெரிந்து வைத்திராத பலருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்றார் அழகிரி.

சுயநலவாதிகள்
கலைஞரை சுற்றியுள்ள சுயநலவாதிகள் கட்சி மற்றும் தொண்டர்களை அவமதிக்கிறார்கள். தொண்டர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டதற்கு என்னை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்கள் என்று அழகிரி தெரிவித்தார்.

அன்பழகன்
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதை நினைவு கூர்ந்தார் அழகிரி.

கருணாநிதி
அன்பழகன் எச்சரித்துள்ள நிலையில் நான் என் தந்தை என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். அதனால் அவர் மதுரைக்கு வரும்போது அவரை நான் சந்திக்க மாட்டேன். மேலும் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நெல்லையில் எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறினார் அழகிரி.












Click it and Unblock the Notifications