'ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க முத்திரை' டி சர்ட்டை அனுப்பி வைத்ததாக திருப்பூர் இமாம் கைது!
திருப்பூர்: ஈராக் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் முத்திரையிட்ட டி சர்ட்டை தொண்டி இளைஞர்களுக்கு அனுப்பி வைத்ததாக திருப்பூர் பள்ளிவாசல் இமாம் பைசுல் ரகுமானை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் முத்திரை பதித்த டி சர்ட்டுகளை அணிந்து இளைஞர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் பேஸ்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி எச்சரித்து விடுவித்தனர். பின்னர் கடந்த 4-ந்தேதி தொண்டியைச் சேர்ந்த ரகுமான், முகம்மது ரில்வான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க முத்திரையை வடிவமைத்து அதனை பனியன்களில் அச்சிட்டுத் தரக்கோரி திருப்பூர் தனக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் இமாம் பைசுல் ரகுமான் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இருவரும் போலீசில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூரில் இமாம் பைசுல் ரகுமானை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு சென்று 100 பனியன்கள் தயாரித்து வாங்கி உள்ளார் ரகுமான். இவற்றில் 27 பனியன்கள் பயன்படுத்தபட்டு உள்ளன.
பயன்படுத்தப்பட்டவை தவிர மீதம் உள்ள பனியன்கள் எங்கே உள்ளன என்பது குறித்தும் ரகுமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications