விவசாயத்தில் நஷ்டம்.. பருத்திக்கு நடுவே கஞ்சா செடி.. விவசாயி கைது.. 3 கிலோ கஞ்சா பறிமுதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன். இவர் தனக்கு சொந்தமான 23 செண்ட் விவசாய நிலத்தில் பருத்தி செடி பயிரிட்டு வந்துள்ளார்.

விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், தனது தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்க்க திட்டமிட்டார். இதற்காக பிரபல கஞ்சா கடத்தல் கும்பல்களுடன் தொடர் ஏற்படுத்திகொண்ட வெள்ளையன், அவர்களிடமிருந்து கஞ்சா விதைகளை வாங்கி வந்து தனது விலை நிலத்தில், ஏற்கனவே வளர்ந்திருந்த பருத்தி செடிகளுக்கு நடுவில் கஞ்சா விதைகளை தூவி வளர்த்து வந்துள்ளார்.

சுமார் 4 மாதங்களுக்கு மேலாக வெள்ளையன் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து வந்த நிலையில், இதுபற்றி சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வெள்ளையனை கைது செய்தனர். மேலும் அவருடைய விளை நிலத்தில் விதைக்கபட்டிருந்த 3 கிலோ கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் வெள்ளையனிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சாவை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும், கஞ்சாவுக்கான தேவை அதிகமாக இருந்ததால் கஞ்சா செடிகளை பயிரிட்டு, அதன்மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வெள்ளையனுக்கு கஞ்சா விதைகளை கொடுத்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications