‛‛மெத்தனால் கலந்த சாராயம்’’.. கள்ளக்குறிச்சியில் உயிர் பலி அதிகரிக்க காரணம் என்ன? எவ வேலு ஷாக் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 18யை தொட்டுள்ளது. மேலும் 9 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டு இருப்பதே உயிர் பலி அதிகரிக்க காரணமாகி உள்ளதாக அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த ஏராளமானவர்களுக்கு இன்று காலையில் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளால் திடீரென்று பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையின் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. கள்ளச்சாராயம் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை வாங்கி குடித்து தான் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி மொத்தம் 13 பேர் வரை இறந்துள்ளனர். தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளகுறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் எவ வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். அதுமட்டுமின்றி தாமதமின்றி அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் எவ வேலு கூறியதாவது:
மெத்தனால் கலந்த சாராயம் குடித்துள்ளனர். இதனால் தான் பலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் 2 பெண்கள் உள்ளனர். ஒருவர் திருநங்கை. மெத்தனால் கொண்டு வந்து விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வேறு யாராவது சாராயம் வாங்கி வைத்துள்ளனரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 9 பேர் மட்டுமே அபாய நிலையில் உள்ளனர். மற்றவர்கள் நன்றாக இருக்கின்றனர். அனைவரையும் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மெத்தமனாக செயல்பட்ட மாவட்ட எஸ்பி உள்பட காவல்துறையை சேர்ந்த 10 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த கிராமங்களை சுற்றி வீடு வீடாக ஆரம்ப சுகாதார நிலை டாக்டர்கள் சென்று மக்களிடம் உடல்நலக்குறைவு பற்றி கேட்டு சிகிச்சை அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. உயர்சிகிச்சைக்கு செல்ல வசதியாக 32 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தவறு நடந்து விட்டது. இதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. நடந்துவிட்டது. முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இறந்தவர்களுக்கு நிவாரணம் அளித்து உதவ வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வரின் கனிவான பார்வை இருக்கும் என்பது எனது நம்பிக்கை'' என்றார்.












Click it and Unblock the Notifications