பாதுகாப்பு பெரிய பிரச்சினை: 6 கட்டங்களாக, 7 நாட்கள் நடைபெறும் மே.வங்க சட்டசபை தேர்தல்
சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்தார். அசாம், மேற்கு வங்கம் ஆகிய மேலும் 2 மாநில தேர்தல் தேதிகளையும் அவர் அப்போது அறிவித்தார். அனைத்து மாநில வாக்கு எண்ணிக்கையும் மே 19ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.

தமிழ்நாட்டைப்போல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டுவந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.
இந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட, மேற்கு வங்க தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறும், அதிலும், முதல்கட்ட தேர்தலின்போது, 2 கட்ட வாக்கு பதிவு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். அதாவது 6 கட்ட தேர்தல் என்றாலும் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு பல கட்டங்களாக அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
*நசீம் ஜைதி அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலின், முதல் கட்ட வாக்குப்பதிவு 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும். இந்த தொகுதிகளுக்கு, மார்ச் 11ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
*மார்ச் 19ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மார்ச் 21ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள். ஏப்ரல் 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
*முதல்கட்ட தேர்தலின் '2வது கட்ட வாக்குப்பதிவு', 31 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. மார்ச் 21ம் தேதி வேட்புமனு தாக்கல் செ்யய கடைசி நாள். வேட்புமனுவை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
*2வது கட்டமாக 56 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 29ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 1ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
*3வது கட்டமாக 62 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். மார்ச் 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனு வாபஸ் பெற ஏப்ரல் 7ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும்.
*4வது கட்டமாக, 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 1ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். ஏப்ரல் 8ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 11ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 25ல் வாக்குப்பதிவு நடைபெறும்.
*5வது கட்டமாக, 53 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 16ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
*6வது கட்டமாக, 25 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 18ம் தேதி கடைசி தினம். வேட்புமனு வாபஸ் பெற ஏப்ரல் 21ம்தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு மே 5ம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications